search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாம்பல் புதன்
    X
    சாம்பல் புதன்

    நாளை சாம்பல் புதன்: கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது

    சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.
    இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கிறார்கள்.

    இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடை பிடிக்கப்படுகிறது.

    இந்த நாட்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட போது அவர் பட்ட துன்பங்கள் நினைவு கூறப்படுகிறது.

    இந்த தவக்காலம் வருடந்தோறும் சாம்பல் புதன் அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு நாளை சாம்பல்புதன் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இதில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குறுத்தோலைகளை சேமித்து எரித்து சாம்பல் ஆக்கப்படுகிறது.

    பின்னர் அதை புனிதப்படுத்தி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் பூசுகிறார்கள். மனிதர்களின் மரணத்தை நினைவூட்டும் வகையிலும் மனமாற்றம் அடைந்து புதுவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இந்த சாம்பல் நெற்றியில் பூசப்படுகிறது.

    சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.

    இந்த நாட்களில் கிறிஸ்தவ ஆலய வழிபாடுகளில் இயேசுவின் சிலுவை துயரம் நினைவுகூறப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களில் இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை நினைவூட்டும் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு பொருள் உதவி செய்வது, ஆஸ்பத்திரியில், சிறையில் துன்பப்படுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய வியாழக் கிழமை பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு சிலுவையில் அறையப் படுவதற்கு முன்பு தனது சீடர்களுக்கு அவர் கடைசி இரவு உணவு வழங்கியது நினைவுகூறப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் பொதுமக்களின் பாவங்களை கழுவி முத்தமிடுகிறார்கள். போப் ஆண்டவரும் சாதாரண மக்களின் பாதங் களை கழுவி முத்தமிடுவது வாடிக்கையாக உள்ளது.

    மறுநாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவை மரணத்தை நினைவுகூரும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புனித சனிக்கிழமை ஆலயங்களில் வழிபாடு நடைபெறுவது இல்லை. அன்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஞாயிறு அன்று ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தையும் புனித வாரத்தையும் அனுசரிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
    Next Story
    ×