என் மலர்
ஆன்மிகம்

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருஉருவம்: கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதா திருஉருவம் திருச்சி உலக மீட்பர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை கிறிஸ்தவர்கள் பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.
திருச்சி பாலக்கரையில் உலக மீட்பர் சகாயமாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு இத்தாலி நாட்டின் ரோம் நகரில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட சகாயமாதாவின் திருஉருவம் நேற்று கொண்டு வரப்பட்டது.
அதில் சகாயமாதாவின் கையில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் அச்சத்தில் இருப்பது போன்றும், மாதா அவரது பயத்தை போக்கி அரவணைத்து கொள்வது போலவும் வரையப்பட்டுள்ளது. நற்செய்தியாளர் லூக்கா இந்த படத்தை வரைந்துள்ளார். பழமை வாய்ந்த மற்றும் அரிய ஓவியத்தை பார்வையிட கிறிஸ்தவர்கள் நேற்று காலை முதலே ஆலயத்திற்கு வரத்தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர்.
மக்கள் செல்வதற்கு வசதியாக ஆலயத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தன. அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை சகாயமாதாவின் திருஉருவத்தை பார்வையிட்டு பிரார்த்தனை செய்தனர். இந்த அரிய திருஉருவ ஓவியம் குறித்து உலகமீட்பர் பசிலிக்கா ஆலயத்தின் பாதிரியார்கள் கூறியதாவது:-
இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் இருந்த போது தாய் மாதா அவரை கையில் வைத்திருக்கும் போது நற்செய்தியாளர் லூக்கா நேரில் கண்டு வரைந்துள்ளார். இந்த திருஉருவம் வரையப்பட்டு 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. இயற்கையான மூலிகைகளால் வரையப்பட்ட இந்த திருஉருவம் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சகாயமாதாவின் இந்த தோற்றம் வேறு எங்கும் பார்க்க முடியாது. மேலும் இந்த தோற்றத்தால் மாதா இடைவிடா சகாயமாதா அன்னை என அழைக்கப்படுகிறார்.
இந்த தோற்றத்தில் இருக்கும் சகாயமாதாவை கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வழிபட தொடங்கினர். திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் கடந்த 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இடைவிடா சகாயமாதாவின் பக்தி முயற்சி தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டியும், திருச்சியில் பசிலிக்கா ஆலயத்தில் 60-வது ஆண்டையொட்டியும் இடைவிடா சகாயமாதாவின் திருஉருவம் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருஉருவத்தை ரோம் நகரில் இருந்து ரட்சகர்கள் சபை குருக்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ஆலயத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு திருச்சிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மதுரையில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவை ஆகிய ஊர்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






