search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    உன் கண்ணீருக்கு என்னிடம் மதிப்பு உண்டு

    “சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”. இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.
    அவன் சிறுவனாய் இருந்தான். அவனுடைய பெற்றோர்கள் போயும் போயும் நீ எங்களுக்கு பிள்ளையாய் பிறந்தாயே என்றனர். அவன் பள்ளிக்கூடம் சென்றான். ஏண்டா நீயெல்லாம் மாடு மேய்க்கப் போயிருக்கலாமே இங்கு வந்து இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றாயே என்றனர் ஆசிரியர்கள். அவன் வேலைக்கு போனான் நீ எங்காவது சாமியாராக போய் சம்பாதிக்காமலே சாப்பிட்டிருக்கலாமே இங்க வந்து என் உயிரையும் வாங்குறியே என்றார் முதலாளி.

    அவன் திருமணம் செய்தான் நான் செய்த பாவம் நீ எனக்கு கணவனாக வந்திருக்கிறாய் என்றாள் மனைவி. வேறு எங்கும் போக வாய்ப்பில்லாமல் இறுதியாக கடவுளிடம் போய் நின்றான். இவ்வளவு பேரும் வேண்டாம் என்ற பிறகுதான் உனக்கு என்னைத் தேடும் உணர்வு வந்ததா. நீ மட்டும் அப்பொழுதே வந்திருந்தால் உன்னை எவ்வளவோ உயரமாய் வைத்திருப்பேன் என்று கடவுள் சொன்னாராம்.

    சில நேரங்களில் இந்த உலகமும் மனிதர்களும் சூழ்நிலைகளும் ஏன் நம்முடைய சொந்த மனதும் நம்மை எதற்கும் லாயக்கில்லை என்று சொல்லவே முந்திக்கொள்ளும். நீ ஏன் வாழ்கின்றாய். நீ வாழ்வதால் என்ன பயன் நீ வாழ்வது யாருக்குத் தேவை என்ற சத்தங்கள்தான் நம்முடைய காதுகளில் தொனிக்கும்.

    கெட்ட குமாரன் கெட்டு சீரழிந்து திரும்பி வந்தபோது இப்படிப்பட்ட ஒருவனை தகப்பன் ஏன் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொந்த சகோதரன் சிந்தித்தான். ஆனால் அந்த தகப்பன் மட்டும்தான் மகனே, நீ எவ்வளவு கெட்டுப் போனாலும் நீ எனக்கு வேண்டும் என்று சொல்ல முடிந்தது. அதுதான் தகப்பனின் மனம். அதுதான் தகப்பன் பார்வை.

    சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய இளம் வயதுகளில் மும்பை பட்டணத்தின் ஆரவார சூழ்நிலையின் நடுவில் நான் நின்றேன். உலகமும் உறவுகளும், நண்பர்களும் ஏன், என் சொந்த மனமும் “ வேணடாம் வேண்டாம் நீ யாருக்கும் தேவையில்லை” என்று சொல்லுவதை நான் உணர்ந்தேன். இளம் வயதில் எவருக்கும் தேவையில்லாதவன் ஆகிவிட்டேனோ என்று கண்ணீர்விட்டு அழுதேன். அந்தக் கண்ணீர் யாருடைய மனதையும் இளக வைக்கவில்லை.

    அங்கே கர்த்தராகிய ஏசு ஒரு வேதாகமத்தின் வாயிலாக” வேண்டும் வேண்டும் நீ எனக்கு வேண்டும் “என்றார்.” உன் கண்ணீருக்கு என்னிடம் மதிப்பு உண்டு” என்றார். இன்று என்னை வேண்டும் வேண்டும் என்று சொல்ல அநேகர் உண்டு. அதற்கு ஒரே காரணம் அன்று ஏசு “ நீ எனக்கு வேண்டும்“ என்று சொன்னதுதான்.

    “சோதனைகள் உன்னை தொய்ந்து போகச் செய்தால் வேதவார்த்தைகளின்மேல் சாய்ந்து இளைப்பாறக் கற்றுக்கொள்”

    - சாம்சன் பால்
    Next Story
    ×