search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    உங்கள் ஜெபமானது உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது

    உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.
    “அவர் (இயேசு கிறிஸ்து) முகம் சூரியனைப் போல பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப் போல, வெண்மையாயிற்று” (மத். 17:2).

    இயேசு, ஜெபம் பண்ணுகையில் மறுரூபமானார். ஒருவர் எழும்பிப் பிரகாசிப்பதற்கு, ஜெபம் மிக முக்கியமானது. இயேசு ஜெபத்தை, தன்னுடைய மூச்சாக, இருதயத்துடிப்பாக வைத்திருந்தார். எப்பொழுதும் அவர் ஜெபிக்க வேண்டும், பிதாவோடு உறவாட வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந்திருக்கக்கூடும். ஆகவே, அவர் அதிகாலையில் வனாந்தரமான ஓர் இடத்துக்குச் சென்று ஜெபம் பண்ணினார் (மாற். 1:35). இரவு நேரங்களில் ஒரு மலையின் மேல் ஏறி, இரா முழுவதும் ஜெபித்தார் (லூக். 6:12).

    ஒரு மனுஷனுடைய ஜெப ஜீவியம், அவனுடைய உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. இரண்டாவது, அவனுடைய குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. மூன்றாவது, அவனுடைய ஊழியத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது. “இயேசு ஜெபம் பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது” (லூக். 9:29).

    இயேசு ஞானஸ்நானம் பெற்று, கரையேறினவுடனே வானம் அவருக்குத் திறக்கப்பட்டது (மத். 3:16). கெத்செமனேயில் ஜெபித்தபோது தேவதூதன் இறங்கி, அவரைப் பலப்படுத்தினான் (லூக். 22:43). இயேசு இரவெல்லாம் ஜெபம் பண்ணி, சீஷர்களை தமக்கென்று தெரிந்தெடுத்தார். ஜெபம் பண்ணி, ஐந்து அப்பத்தையும், இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்குப் போஷித்தார். நீங்கள் எழும்பிப் பிரகாசிக்க வேண்டுமானால், உங்கள் ஜெப நேரத்தை அதிகப்படுத்துங்கள்.

    ஜெபத்தினால் கொரியாவிலுள்ள, போதகர் பால் யாங்கி சோவின் சபையில், பெரும் எழுப்புதல் ஏற்பட்டது, பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், சபையிலே சேர்ந்தார்கள். அவர் சொன்னார், எழுப்புதலுக்கு மூன்று காரணங்கள் உண்டு. “முதலாவது, ஜெபம், இரண்டாவது, ஜெபம். மூன்றாவது, ஜெபம்” என்றார்.

    ஜான் வெஸ்லி என்ற பக்தன், எழும்பிப் பிரகாசித்ததன் முக்கிய காரணம், அவருடைய ஜெப ஜீவியம்தான். அவர் நற்செய்தி கூட்டங்களில் பேசப் போவதற்கு முன்பாக இரண்டு, மூன்று நாட்கள், தன் அறைக்கதவை மூடிக்கொண்டு, கண்ணீரோடும், பெருமூச்சோடும், பலத்த சத்தத்தோடும் ஜெபம் பண்ணுவார். அப்பொழுது அவருடைய ஒவ்வொரு வார்த்தையும், அக்கினியாய் வெளிவரும். ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய் தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.

    உங்களுடைய ஜெப நேரத்தில் கல்வாரிச் சிலுவையை அதிகமாய் தியானம் செய்யுங்கள். வேதம் சொல்லுகிறது, “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள். அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை” (சங். 34:5). உங்கள் ஜெபமானது, உங்களை பரலோகத்தோடு இணைக்கிறது. பரலோகம் என்பது, ஒளிமயமான மகிமையின் தேசம். அங்கே இருளோ, இரவோ இருப்பதில்லை.

    பேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்போது, சபையார் பரலோக தேவனை நோக்கி முறையிட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று, அவனை எழுப்பினான். பேதுரு விடுதலையடைந்தார். சத்துருவின் சங்கிலிகள் அறுபட்டுப்போகும்படி, ஜெபியுங்கள்.

    நினைவிற்கு:- “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசா. 9:2).
    Next Story
    ×