search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    பூண்டி மாதா பேராலயத்தில் பக்தர்கள் இன்றி நடந்த பெருவிழா கொடியேற்றம்

    பூண்டிமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்( செப்டம்பர்) 9-ந் தேதி விழா நடக்கிறது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்( செப்டம்பர்) 9-ந் தேதி விழா நடக்கிறது.

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு அன்னை மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது. பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குத்தந்தையர்கள் இனிகோ, ஜான்சன், ஆன்மிகதந்தை அருளானந்தம் மற்றும் பேராலய பணியாளர்கள் இணைந்து ஜெபமாலை பாடல்களுடன் திருக்கொடியை பேராலயத்தை சுற்றி எடுத்து வந்தனர்.

    பின்னர் கொடியை புனிதம் செய்து ஏற்றி பேராலய அதிபர் பாக்கியசாமி ஏற்றினார். வழக்கமாக பூண்டி மாதா பேராலய வளாகத்தில் திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று பூண்டி மாதா பேராலய வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. பேராலய வளாகத்தில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப் இன்ஸ்பெக்டர் சார்லிமேன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பேராலயத்துக்கு வந்த பக்தர்களை திருப்பி அனுப்பினர்.
    Next Story
    ×