என் மலர்

  ஆன்மிகம்

  இயேசு
  X
  இயேசு

  இயேசுவை அன்பின் வடிவாக மட்டுமே பார்க்க முடியும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியது உண்மையே.
  மனிதர்கள் அனைவரும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்று இயேசு கிறிஸ்து போதித்தார். நீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுத்த அவர், உண்மையை நிலைநாட்ட துன்புறவும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.

  பொதுவான சந்தேகம்

  “மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (லூக்கா 12:49) என்றும், “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” (மத்தேயு 10:34) என்றும் இயேசு போதித்தார். “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியதால், ‘கண்ணுக்கு கண்’ போன்ற பழைய ஏற்பாட்டு சட்டங்களை அவர் ஆதரித்தார். ஆனால், அவரது உண்மை முகத்தை மறைத்து, அவர் அன்பை போதித்ததாக கிறிஸ்தவர்கள் கதை அளக்கின்றனர் என்று ஒரு பிரிவினர் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.

  "மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்."

  சட்டத் தெளிவு

  “‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” (மத்தேயு 5:38-39) “‘உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.” (மத்தேயு 5:43-45) “நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டு கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” (மாற்கு 7:13) என்று இயேசு கண்டிக்கிறார். இவ்வாறு, மனித விருப்பத்துக்கு ஏற்ப வளைக்கப்பட்ட சட்டங்களுக்கு பதிலாக, மனிதகுல நலனுக்கான கடவுளின் சட்டங்களை இயேசு தெளிவாக போதித்தார்.

  நிறைவேற்றவே

  “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியது உண்மையே. ஆனால், கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் மறைநூல் பகுதிகளைக் குறித்தே இயேசு கூறினார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” (லூக்கா 24:44) என்று உயிர்த்த இயேசு நினைவூட்டியதாக நற்செய்தியில் காண்கிறோம். ஆகவே, இயேசுவின் வாழ்வும் போதனைகளுமே திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவு செய்கின்றன. “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காக மன்றாடிய இயேசு, அன்பையே போதித்தார் என்று உறுதியாக கூற முடியும்.

  தீயும் வாளும்

  “உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்” (யோவான் 18:37) என்ற இயேசுவின் வார்த்தைகளில், “மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்” (லூக்கா 12:49) என்று அவர் கூறியதன் பொருளை உணர முடிகிறது. அதாவது கடவுளைப் பற்றிய உண்மையை அறியும் ஆர்வத்தையே, தீ என்று உருவகமாக இயேசு குறிப்பிடுகிறார். உண்மையை ஏற்போருக்கும் எதிர்ப்போருக்கும் இடையே பிளவு ஏற்படும் என்பதை வாள் என்ற உருவகத்தால் இயேசு விளக்குவதைக் காண்கிறோம்: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.” (மத்தேயு 10:34-37) தம்மைப் பின்பற்றுவோர் அனைவரும் துன்பத்தை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று போதித்த ஆண்டவர் இயேசுவை அன்பின் வடிவாக மட்டுமே பார்க்க முடியும்.
  Next Story
  ×