search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    மனிதருக்குத் தீர்ப்பு வழங்க வருவார்

    வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.

    “வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து வருவார்” (From heaven Jesus Christ will come to judge the living and the dead) என திருத்தூதர்களின் ஏற்கையின் 7ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.

    மாட்சியில் வருவார்

    படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவராகவும், திருச்சபைக்குத் தலைவராகவும் திகழ்கின்ற மாட்சிப்பெற்ற கிறிஸ்து, மறைபொருளாக இந்த மண்ணுலகில் இருக்கிறார். இங்கு அவரது ஆட்சி ஏற்கனவே விதைக்கப்பட்டுள்ளது. அதுவே, திருச்சபையில் தொடக்க நிலையில் உள்ளது. ஒருநாள் அவர் மாட்சியோடு திரும்பி வருவார்; ஆனால் எந்த நேரத்தில் வருவார் என நமக்குத் தெரியாது. இதன் காரணமாகவே, “ஆண்டவரே வாரும்” (திருவெளிப்பாடு 22:20) என இறைவேண்டல் செய்தவாறு நாம் விழிப்புடன் காத்திருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையிலும், இறுதித் தீர்ப்பிலும், கடவுளின் நிலையான வெற்றி வெளிப்படும். இவ்வாறு இறையாட்சி நிலைநாட்டப்படும்.

    தீர்ப்பு வழங்குவார்

    நிலையில்லா இவ்வுலகு முடிவுறும் வேளையில், கிறிஸ்துவின் மாட்சிமிகு வருகை நிகழும். அந்நாளில் எக்காளம் முழங்க இறந்தோர் அனைவரும் உயிர்பெற்று எழுவர். வாழ்வோரும் அவர்களோடு கிறிஸ்துவின் முன்பு ஒன்றுகூட்டப்படுவர். அனைவருக்கும் மீட்பு அளிக்க வந்த கிறிஸ்து, உலக மீட்பராகத் தாம் பெற்றுக்கொண்ட அதிகாரத்தோடு தீர்ப்பு வழங்குவார். மறைவான எண்ணங்களையும், கடவுளோடும் பிறரோடும் நமக்குள்ள உறவுநிலைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவார். ஒவ்வொருவரும் தத்தம் செயல்களுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனைத் தீர்ப்பையோ முடிவில்லாக் காலத்திற்கும் பெற்றுக்கொள்வர். இவ்வாறு “கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவு” (எபேசியர் 4:13) வரும்போது, “கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்” (1கொரிந்தியர் 15:28).
    Next Story
    ×