search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தவக்காலம் என்பது ஆன்மாவின் வசந்த காலம்

    தவக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.
    இலையுதிர் காலத்தில் திடீரென்று ஒரே சாரல் மழை. பூமி நனைகிறது. மண் மணக்கிறது, தளிர்கள் அரும்புகின்றன. மரங்கள் பசுமை போர்த்துகின்றன. பூக்கள் மலர்ந்து வசந்தத்தை அறிவிக்கின்றன. மனம் குளிர்ந்து போகிறது. ஒரே ஒரு மழையால் எத்தனை நன்மைகள். அவ்வாறே, தவக்காலம் என்பது ஆன்மாவின் வசந்த காலம். மனிதர்களுக்கு பல நன்மைகள் தருகின்ற காலம்.

    இக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.

    இயேசு கற்றுத்தந்த ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற வேண்டலை (மத்தேயு 6:9-13) நினைவில் கொள்வோம். இந்த வேண்டலில், எங்கள் தந்தையே எங்களுக்கு தாரும், எங்களுக்கு எதிராக, நாங்கள் மன்னித்தது போல, எங்கள் குற்றங்களை, எங்களை சோதனைக்கு என ஆறு இடங்களில் சமூகத்தை உள்ளடக்கும் பன்மைச்சொற்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தின் அங்கம் என்றும், அனைவரும் இறைவனின் மக்கள் என்றும் முப்பரிமாணத்தை இயேசு இந்த வேண்டலில் நினைவு படுத்துகின்றார்.

    பிறருக்கு எதிராக குற்றம் இழைக்கிற போது, அது இறைவனுக்கு எதிரான குற்றம் என்பதை ‘கடவுளுக்கு எதிராகவும், உமக்கும் எதிராகவும் பாவம் செய்தேன்’ (லூக்கா 15:21) என்று இயேசுவின் ஒரு உவமை உறுதிப்படுத்துகின்றது. பிறருக்கு நன்மை செய்கிற போது, அது கடவுளுக்கு செய்வதாகும் என்பதை ‘எனக்கே செய்தீர்கள்’ (மத்தேயு 25:40) என்று சொற்கள் நினைவுபடுத்துகின்றன.

    இவையனைத்தும் நமக்கு சொல்கின்ற செய்தி இதுதான்: சமூகத்தை உள்ளடக்காத மனமாற்றமும், சமூக அக்கறையற்ற நற்செயல்களும் பொருளற்றவை. எனவே, இத்தவக்காலத்தில் முப்பரிமாண ஆன்மிகத்தில் வேரூன்றி வளர்வோம். பிறருக்கு உதவிகள் செய்வோம்.

    அருட்பணி. அ.ஸ்டீபன் மார்ட்டின், சே.ச. திண்டுக்கல்.
    Next Story
    ×