search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இறை நம்பிக்கையினால் உயிர்பெறலாம்

    மரணத்தை தழுவியவர்கள் உயிர்பெறுவர் என்பது ஏதோ கற்பனை அல்ல. அது நம் மனதைக் குளிர்விக்கும் விவிலிய போதனை.
    இயேசுவின் நண்பனும், மார்த்தாள் மற்றும் மரியாளின் தம்பியுமான லாசரு, இறந்துபோயிருந்தார். அந்த இழப்பை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. இரங்கல் தெரிவிக்கவும், ஆறுதல் கூறவும் ஆட்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் மார்த்தாள், மரியாள் இருவரது உள்ளங்களும் இதுபோன்ற ஆறுதல்களால் சமாதானம் அடையவில்லை. காரணம் தங்கள் குடும்பத்தின் மீது அன்பாயிருந்த இறைமகன் இயேசுவின் மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை.

    அவர் மட்டும் ஊரில் இருந்திருந்தால் நோய்வாய்ப்பட்டிருந்த தங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான் என்று அவர்கள் நம்பினார்கள். அவன் நோயுற்றிருந்த தொடக்கத்திலேயே இயேசுவுக்கு செய்தியும் அனுப்பினார்கள். நிலைமை கைமீறிப் போவதற்கு முன்னால் அவர் வந்துவிடுவார் என மார்த்தாளும் மரியாளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால் அன்பான தம்பி மரித்துப்போனான். மனமில்லாமல் அவனை கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால் இயேசு வரவில்லை, அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. லாசரு இறந்து நான்கு நாட்கள் கழித்து, பெத்தானியாவுக்கு அருகே இயேசு வந்துகொண்டிருப்பதைப் பற்றிய செய்தி மார்த்தாளுக்குக் கிடைக்கிறது. துக்கம் மனதை அடைக்க ஓடோடிப் போய் இயேசுவை எதிர்கொண்டாள்.

    இயேசுவைப் பார்த்த கையோடு தன் மனதிலும் மரியாளின் மனதிலும் தேங்கியிருந்த ஏக்கத்தைக் கொட்டுகிறாள். “ஆண்டவரே, நீங்கள் இங்கு இருந்திருந்தால் எங்கள் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்று சொல்கிறாள். மார்த்தாளுடைய நம்பிக்கையும், விசுவாசமும் இன்னும் மறைந்துவிடவில்லை. எனவே, இயேசுவைப் பார்த்து, “நீர் கடவுளிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவாரென்று இப்போதும் நம்புகிறேன்” என்று சொன்னாள். அவளுடைய விசுவாசத்தை இன்னும் பலப்படுத்துவதற்காக இயேசு உடனடியாக அவளிடம், “உன் சகோதரன் எழுந்திருப்பான். கடவுளுடைய மகிமையைக் காண்பாய் (யோவா. 11:21)” என்று சொன்னார். இயேசுவை அவர்கள் லாசருவின் கல்லறைக்கு அழைத்துப்போனார்கள். அதற்குள் ஆயிரக்கணக்கான யூதர்கள் அங்கே திரண்டுவிட்டார்கள்.

    கல்லறையை மூடியிருந்த கல்லை எடுத்துப் போடச் சொல்லி இயேசு கட்டளையிட்டார். ஆனால் மார்த்தாள் அதை ஆட்சேபிக்கிறாள். “லாசரு இறந்து நான்கு நாளாகிவிட்டது, உடல் அழுகி இருக்குமே” என்று சொல்கிறாள். அதற்கு இயேசு, “நீ நம்பிக்கை வைத்தால் கடவுளுடைய மகிமையைக் காண்பாய் என உனக்குச் சொன்னேன் அல்லவா?” என்று திரும்பவும் அவளுக்குச் சொல்கிறார். அவள் நம்புகிறாள், பரலோகத் தந்தையின் மகிமையைப் பார்க்கிறாள்.

    அடுத்து அங்கே நிகழ்ந்த அற்புதம் மரணம்வரை மார்த்தாளுடைய மனதைவிட்டு மறையாமல் இருந்திருக்கும். “லாசருவே, வெளியே வா!” என்று இயேசு அதிகார தொனியில் அழைக்கிறார்; உடனே, உடல் முழுக்கச் சுற்றப்பட்டுள்ள துணியோடு கிடத்தப்பட்டிருந்த லாசருவின் உடல் எழுந்து அமர்கிறது. இப்போது உயிர்பெற்ற உடலோடு அந்தக் கல்லறைக் குகையின் வாசலை நோக்கி லாசரு நடந்து வருகிறார். “இவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள்” என்று இயேசு கட்டளையிடுகிறார்; அந்த கணம் மார்த்தாளும் மரியாளும் ஓடிப்போய் தங்கள் சகோதரனை நெஞ்சாரத் தழுவிக்கொண்டு ஆனந்தத்தில் அழுகிறார்கள்.

    அந்தக் கல்லறையின் கல்லைப்போல அவர்களது மனதை அழுத்திக்கொண்டிருந்த பாரமெல்லாம் நீங்கிவிடுகிறது. மரணத்தை தழுவியவர்கள் உயிர்பெறுவர் என்பது ஏதோ கற்பனை அல்ல. அது நம் மனதைக் குளிர்விக்கும் விவிலிய போதனை.
    Next Story
    ×