search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்பானைகளை ஆயுதமாக்கி, போரில் வெற்றிகண்ட தேவன்
    X
    மண்பானைகளை ஆயுதமாக்கி, போரில் வெற்றிகண்ட தேவன்

    மண்பானைகளை ஆயுதமாக்கி, போரில் வெற்றிகண்ட தேவன்

    மீதியானியர்களின் பிடியிலிருந்து மீள, கிதியோனிடம் படைதிரட்டும்படி கடவுள் பேசினார். அதன்படி 32 ஆயிரம் வீரர்களை கிதியோன் திரட்டினார்.
    மீதியானியர்களின் பிடியிலிருந்து மீள, கிதியோனிடம் படைதிரட்டும்படி கடவுள் பேசினார். அதன்படி 32 ஆயிரம் வீரர்களை கிதியோன் திரட்டினார். ‘இத்தனை வீரர்கள் உனக்குத் தேவையில்லை’ என்று எடுத்துரைத்த கடவுள் ‘எச்சரிக்கையாக இருப்பவர்களை மட்டும் தேர்ந்து கொள்’ என்றார். அதனால் 32 ஆயிரம் படைவீரர்களில், வெறும் 300 பேரை கிதியோன் தேர்ந்தெடுத்து, கடவுளின் கட்டளைக்காக காத்திருந்தார்.

    300 பேர் கொண்ட தன் படையணியை தலா 100 பேர் அடங்கிய மூன்று குழுக்களாகப் பிரித்தார். பின்னர் கடவுள் கூறியபடி ஒவ்வொருவருக்கும் ஒரு ஊதுகொம்பும், ஒரு பெரிய மண்பானையும் கொடுக்கப்பட்டது. மண்பானைக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீப்பந்தத்தை மறைத்து வைக்கும்படி கிதியோன் உத்தரவிட்டார். பிறகு தன் வீரர்களைப் பார்த்து “நாம் இந்த இரவில் புறப்பட்டு மீதியானியர்களின் முகாமை நோக்கிச் செல்லப்போகிறோம். முகாமின் எல்லையை அடைந்ததும், நான் செய்வதை நன்றாகக் கவனித்து, அதேபோல் நீங்களும் செய்ய வேண்டும். நாம், அவர்களது முகாமைச் சூழ்ந்துகொண்டதும் நான் ஊதுகொம்பை ஊதும்போது நீங்களும் அவரவர் ஊதுகொம்பை எடுத்து ஊத வேண்டும். ஊதிக்கொண்டே ‘இது யகோவாவின் போர்.. கிதியோனின் போர்..’ என்று முழங்க வேண்டும்” என்றார்.

    கிதியோன் கூறியதைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட 300 வீரர்களும் எதிரிகள் முகாமிட்டிருந்த பாளையத்தின் ஓரம்வரை பதுங்கிச் சென்றார்கள். அப்போது இரவு பத்து மணி ஆகியிருந்தது. மீதியானிய வீரர்கள் அனைவரும் வயிறுமுட்ட மதுவருந்தி, பின் உண்ட களைப்பில் நன்கு கண் அயர்ந்திருந்தனர். அவர்களைத் தாக்குவதற்கு ஏற்ற தருணம் இதுவே என்று எண்ணிய கிதியோன், இப்போது தனது ஊதுகொம்பை எடுத்து ஊதுகிறார். தலைவர் செய்வதைக் கண்டு முகாமைச் சூழ்ந்திருந்த 300 வீரர்களும் அவ்வாறே செய்கிறார்கள்.

    300 மண்பானைகளைக் கீழேபோட்டு உடைக்கும்படி கிதியோன் கூற, வீரர்கள் அவ்வாறே செய்கிறார்கள். 300 மண்பானைகள் ஒரே நேரத்தில் உடைந்த சத்தம், தலைக்கேறிய போதையுடன் அரைத்தூக்கத்தில் இருந்த மீதியானியர்களைத் திடுக்கிடலுடன் விழித்தெழச் செய்து பீதிகொள்ள வைக்கிறது. 300 ஊதுகொம்புகளும் முழங்க, 300 வீரர்களும் ஆரவாரம் செய்தனர். அதிர்ச்சியடைந்த மீதியானியர், யார் எதிரி, யார் நண்பன் என்று அடையாளம் காணமுடியாத குழப்பத்தில் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு தரையில் சாய்ந்து மடிந்தார்கள். இதையும் மீறித் தப்பிச்சென்றவர்களையும், மீதமிருந்தவர்களையும் 300 வீரர்கள் பிடித்துக் கைதிகளாக்குகிறார்கள். இவ்வாறு கானான் தேசத்தை வெட்டுக்கிளிக் கூட்டம்போல் வேட்டையாடி வந்த மீதியானியர்களின் ஆக்கிரமிப்பு முற்றாகத் துடைத்தெறியப்படுகிறது.
    Next Story
    ×