என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்தவ ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
    X
    கிறிஸ்தவ ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

    கிறிஸ்தவ ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

    கிறிஸ்தவ ஆலயங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? என்பது குறித்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அறிவித்துள்ளார்.
    தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பங்குதந்தையர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழகஅரசு வழிபாட்டு தலங்களை ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியுள்ளது.

    அந்த வழிகாட்டு நெறிமுறைகளை தஞ்சை மறைமாவட்டத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, பிற பகுதிகளில் கடைபிடிக்க வேண்டும். மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் ஞாயிறு மற்றும் வார நாட்களில் திருப்பலி மற்றும் அனைத்து திருவருட்சாதன கொண்டாட்டங்களையும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கொண்டாட வேண்டும்.

    ஆலயத்தின் பரப்பளவிற்கு ஏற்ப, இறை மக்களை ஆலயத்தின் உள்ளே அனுமதிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு ஆலயத்தின் பரப்பளவு திருப்பலியில் கலந்து கொள்ளும் மக்களுக்கு போதுமான அளவில் இல்லையெனில், திருப்பலிகளின் எண்ணிக்கையை வசதிக்கு ஏற்றார்போல் பங்கு பேரவையின் ஆலோசனையோடு அதிகரித்து கொள்ளலாம்.

    மலர்மாலை, அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற பொருட்களை காணிக்கையாக பெறுவதை தவிர்க்க வேண்டும். சுரூபங்களை தொட்டு வணக்கம் செலுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். காணிக்கை செலுத்த விரும்புவோர் சமூக இடைவெளியை கடைபிடித்து காணிக்கை பெட்டியில் காணிக்கையை செலுத்த வேண்டும்.

    திருப்பலி மற்றும் திருவருட்சாதன கொண்டாட்டங்களில் தீர்த்தம் தெளிப்பதை தவிர்க்க வேண்டும். திருமணம், இறப்பு மற்றும் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றும்போது 50 பேருக்கு மிகாமல் மக்களை கலந்து கொள்ள செய்வது சால சிறந்தது.

    சமூக இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினியை பயன்படுத்துதல் போன்றவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். ஆலய முகப்பில் கிருமிநாசினியை வைத்து மக்கள் அதை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆலயத்தின் உள்ளே வழிபாட்டு நேரங்களில் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.

    ஆலயங்கள் இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், மூச்சு திணறல் போன்ற நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் வழிபாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×