search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் சிலுவை மொழிகள்
    X
    இயேசுவின் சிலுவை மொழிகள்

    நாமும் பிறர் குற்றங்களை மன்னிப்போம்

    சிலுவையின் மரண ஆக்கினையின் நேரத்திலும் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும், தண்டனையை நிறைவேற்றின அதிகாரிகளையும், சிலுவையில் அறையும்படி அதிகாரிகளை நிர்பந்தம் பண்ணின ஜனங்களையும் மன்னிக்கும்படி வேண்டுதல் செய்கிறவராக காணப்பட்டார்.
    தவக்காலம் என்று உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவர்களால் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கிற இந்த தவசு நாட்களில் அவர்தாமே தன்னுடைய வாழ்வில் போதித்த, கடைப்பிடித்த சத்தியங்களை நாம் தியானிப்பது நல்லது. மன்னிப்பு என்ற மிகப்பெரும் சத்தியத்தை மிக ஆணித்தரமாக தம் போதனையில் காண்பித்தவர் இயேசு கிறிஸ்து. மனித உரிமைகளைப்பற்றி பேசுகிற இன்றைய நாட்களுக்கும், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று மனிதன் தன் எதிராளியிடம் கோபத்தை வெளிப்படுத்திய அந்த நாட்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

    மிகக் கடுமையான அந்நாட்களிலேயே மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்(மத்:6:44). உன் சகோதரன் உனக்கு விரோதமாய் குற்றஞ்செய்தால், அவனை கடிந்துகொண்டு அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக’ என்றும் தம்மைப் பின்பற்றினவர்களுக்கு இயேசு போதித்தார்.

    அனேகம்பேர் கூறும் நல்ல போதனைகளை நாம் அவர்களது பேச்சிலே கேட்கலாமே தவிர அவர்களது வாழ்வில் காண இயலாது. ஆனால் சிலுவையின் மரணபரியந்தம் தம் உபதேசங்களை நடைமுறையில் காண்பித்தவர் இயேசு கிறிஸ்து. கொல்கதா மலையில் சிலுவையில் அறையப்பட்டவராக் தொங்கிக்கொண்டிருந்தபோது தம்மை சிலுவையில் அறைந்த ஜனங்களுக்காக ‘பிதாவே, இவர்களை மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்’ என்று அவர் வேண்டுதல் செய்தார்.

    சிலுவையின் மரண ஆக்கினையின் நேரத்திலும் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும், தண்டனையை நிறைவேற்றின அதிகாரிகளையும், சிலுவையில் அறையும்படி அதிகாரிகளை நிர்பந்தம் பண்ணின ஜனங்களையும் மன்னிக்கும்படி வேண்டுதல் செய்கிறவராக காணப்பட்டார். உறவினர்கள், நண்பர்கள், சொந்த குடும்பத்தினர் என்று யாராக இருந்தாலும் சரி, அவர்கள் செய்த குற்றங்களை மன்னியுங்கள். அந்த மன்னிப்பு உங்கள் உள்ளத்தில் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காத சமாதானத்தை உங்களுக்குப் பெற்றுத்தரும். உங்களுக்கு விரோதமாய் தவறு செய்தவர்கள் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்கத் தயங்காதிருங்கள். பிறர் குற்றம் மன்னித்தோம், ஆதலால் எங்கள் குறைகளை எங்களுக்கு மன்னியும் என்று நாம் தேவனிடத்தில் இரக்கம் கேட்கும் நேரங்களில் தேவனும் நமக்கு இரங்குவார். சிலுவையில் கிறிஸ்து அடைந்த பாடுகளையும், வேதனைகளையும் போல நம்மை ஒருவரும் வேதனைப்படுத்த இயலாது.ஆனால் அவ்வளவு உபத்திரவத்தைக் கொடுத்தவர்களைக் கூட இயேசுவானவர் மன்னித்தாரே. இந்த தவசு நாட்களில் நாமும் பிறர் குற்றங்களை மன்னிப்போம். மனமகிழ்வோடு வாழ்வோம்...

    போதகர்.மேரி அமல்ராஜ், பெத்தேல் ஏ.ஜி.திருச்சபை,திருப்பூர்

    Next Story
    ×