search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    நம்பிக்கையாய் இருங்கள்

    ‘ எப்போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்; எத்தனை துன்பத்திலும் அவர் என்னைக் காப்பார்’ என்ற நம்பிக்கையே நம்மைக் காக்கும்.
    இயேசுவின் போதனைகளில் ‘மலைப்பொழிவு’ போதனை மிகவும் முக்கியமானதாகவும் புகழ்பெற்றதாகவும் இருக்கிறது. திரளான மக்கள் கூட்டத்தின் முன்பு இந்தப் போதனையை நிகழ்த்த ஒரு மலைக்குன்றின் மீது ஏறி அமர்ந்தார் இயேசு. ‘செர்மோன் ஆப் மவுண்ட்’ என்று அழைக்கப்படும் இந்த மலைக்குன்று, கலிலேயக் கடற்கரை அருகில்தான் இருக்கிறது. இயேசு பலமுறை கலிலேயக் கடலுக்கு வந்துள்ளார். ஒருமுறை கலிலேயக் கடற்கரையில் காலை முதலே போதனை செய்துகொண்டிருந்தார். மாலைவேளை நெருங்கியதும் மானுட மகனுக்கு களைப்பு ஏற்பட்டது. அதுவரையிலும் கூட தன்னை விட்டு நீங்கி தத்தம் வீடுகளுக்குச் செல்லாமல் திரளான மக்கள் சூழ்ந்திருப்பதைக் கண்டு, கலிலேயக் கடலின் மறுகரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

    அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, “போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்” என்றார். இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்கு குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

    இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, “ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும். அவர் இறந்துவிட்டார்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்றார்.

    பின்பு இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். சீடர்கள் பயந்து அலறி அவரிடம் வந்து, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள்.

    கண்விழித்த இயேசு அவர்களை நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டபடி எழுந்து நின்றவர், காற்றையும் கடலையும் அதட்டிக் கடிந்துகொண்டார். உடனே கடலில் மிகுந்த அமைதி உண்டாயிற்று. சீடர்கள் அனைவரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றவே! இவர் எத்தகையவரோ?” (மத்தேயு 8:23-27) என்று வியந்தனர்.

    இயற்கை நம் மீது தாக்குதல் தொடுக்கும்போதெல்லாம் நாம் வாடிவிடுகிறோம். நம் அருகில் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்தும், நாம் மரணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆபத்தான பேரிடர் நேரத்தில் நமக்கு ஆறுதலாக இருக்கிறவரும், அமைதியைத் தருகிறவரும் நம் ஆண்டவர் என்கிற செய்தி, இந்த விவிலியப் பதிவு வாயிலாக நமக்கு வெளிப்படுகிறது.

    இயேசுவின் சீடர்களுக்கு அவர்கள் மீன்பிடித்து வாழ்ந்த கலிலேயக் கடலைப்பற்றி நன்றாகத் தெரியும். கலிலேயக் கடல், விசித்திரங்களுக்குப் பெயர் பெற்றது. திடீர், திடீர் என்று புயலாலும், சூறைக்காற்றாலும், மழையாலும் பயமுறுத்தக்கூடியது இந்தக் கடல். அது அமைந்திருக்கின்ற புவியியல் அமைப்புதான் இத்தகைய உடனடி பருவநிலை மாற்றத்துக்குக் காரணம். இதை மீறியே இக்கடலில் வளிதொழில் ஆள்கிறார்கள் மீனவர்கள். திடீர் புயலின் வேகத்தைக் கண்டதும் தாங்கள் சாகப்போகிறோம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. எல்லாமே கைமீறிப் போய்விட்டது. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலை வந்தபிறகே உறங்கிக்கொண்டிருந்த இயேசுவை அவர்கள் சரணடைகிறார்கள்.

    அதுவரை, தாங்களே அதனை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். இயேசுவை மறந்து விடுகிறார்கள். நமது வாழ்விலும் இதுதான் நடக்கிறது. நம்மால் முடியாமல் நிலைமை கைமீறுகிற போதுதான், நாம் கடவுளைத் தேடுகிறோம். அது தூய இறை நம்பிக்கையாக இருக்க முடியாது.‘ எப்போதும் கடவுள் என்னோடு இருக்கிறார்; எத்தனை துன்பத்திலும் அவர் என்னைக் காப்பார்’ என்ற நம்பிக்கையே நம்மைக் காக்கும். 
    Next Story
    ×