search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்

    வேதாகமத்தில் சங்கீதம் முதலாம் அதிகாரம் 2-ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்’ என்று கூறப்பட்டுள்ளது.
    இதுவரை நாம் எப்படி இருந்தோம் என்பதை விட இந்த தவக்காலத்தில் எப்படி நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வேதத்தை எப்படி தியானிப்பது, கர்த்தருக்கு எப்படி பாக்கியவானாய் இருப்பது என்பது குறித்து சற்று தியானிப்போம்.

    பொதுவாக ஒரு இடத்தில் கண்காட்சி நடந்தால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருட்கள் பிடித்தமானதாக அமையும். அதில் ஒருவர் என்ன செய்வார் என்றால் தனக்கு பிடித்தமான பொருளை எடுத்து இது எப்படி செய்தார்கள்?, எப்படி உபயோகப்படுத்துவது? என்பதை குறித்து ஆய்வு செய்து பின்னர் அந்த பொருளை வாங்குவார். சிலர் பார்த்தவுடன் நமக்கு பிடித்திருக்கிறது நாம் வாங்கி கொள்ளலாம் என்று வாங்கி சென்று விட்டு அந்த பொருள் வீட்டில் ஒரு மூலையில் கிடக்கும்.

    இப்படித்தான் நாமும் வாரந்தோறும் கோவிலுக்கு செல்கிறோம். விசேஷ நாட்களில் கோவிலுக்கு செல்கிறோம். அப்படி செல்லும் போது கோவிலுக்கு அருகே புதுப்புது கடைகள் இருக்கும் உடனே அங்கு சென்று பல்வேறு பொருட்களை வாங்கி விட்டு, பின்னர் வேதாகமத்தை புதிய புதிய வடிவங்களில் பார்த்து அதையும் வாங்கி வருகிறோம். அதை சிலர் வாங்கி வந்து வீட்டின் மூலையில் போட்டு விடுகின்றனர். ஆனால் சிலர் அந்த வேதாகமத்தை ஆராய்ந்து அறிகின்றனர். இப்படி வேதத்தை ஆராய்ந்து தியானிக்கும் போது நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு ஏற்பட்டு நம் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.

    இப்படி வேதாகமத்தை வாங்கி வந்து தியானிப்பதை விட்டு விட்டு, மற்றவர்களிடம் எங்கள் வீட்டில் சிறியதும், பெரியதுமாக பல்வேறு வடிவங்களில் உள்ளது என்று பெருமை பாராட்டாமல் அந்த வேதாகமத்தை இந்த தவக்காலத்தில் தியானிக்க ஆரம்பிப்போம்.

    இதைத்தான் வேதாகமத்தில் சங்கீதம் முதலாம் அதிகாரம் 2-ம் வசனத்தில் ‘கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிற மனிதன் பாக்கியவான்’ என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே இந்த தவக்காலத்தில் வேதத்தை வாசித்து அதை தியானித்து கர்த்தருக்கு பாக்கியவானாய் மாற முயற்சிப்போம். கடவுள் தாமே நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

    சகோ.அகஸ்டின்குமார், வீரபாண்டி, திருப்பூர்.

    Next Story
    ×