search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பிறர் கருத்தை மதிப்போம்

    வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் பிறர் கருத்துகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டும். இதனை உணர்ந்து கொண்டவர்கள், எதிர்பார்த்த வெற்றியினை நிறைவாக பெற்றிட இயலும்.
    வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்கள் பிறர் கருத்துகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டும். இதனை உணர்ந்து கொண்டவர்கள், எதிர்பார்த்த வெற்றியினை நிறைவாக பெற்றிட இயலும். இன்றைய உலகினில் எல்லா மனிதர்களிடமுமே, பிறர் என்னைப்பற்றி உயர்வாக பேச வேண்டும். மதிக்க வேண்டும் என்ற உணர்வு மிக அதிகமாகவே காணப்படுகிறது. பிறர் விமர்சிக்கின்ற போது எளிதாக மனமுடைந்து சோர்வு நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். நம் மீது அக்கறையுடன் விமர்சிப்பவர்கள் விமர்சனத்தை மதிக்கலாம். ஆனால் எல்லாருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை. இந்த அணுகுமுறையே நமது வெற்றிக்கு மிகுந்த அவசியமானவை என்பதனை உணர்ந்திடுவோம்.

    ஒன்றுமில்லாது அனைத்தையும விட்டு விட்டு பற்றற்று வாழும் துறவினை கூட இந்த உலகம் விமர்சிக்கின்றது. ஒன்றுமே வேண்டாம் என்று நிலையோடு வாழ்ந்தவரே பட்டினத்தார். ஒருமுறை உடல் களைப்பினால் வயலில் படுத்திருந்தார். அறுவடை முடிந்திருந்த காலமது. குச்சி குச்சியாய் பூமியிலிருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக்கொண்டிருந்தது. அந்த வழியே நடந்து சென்ற இருவரில் ஒருவர் வரப்பு மீது தலை வைத்து படுத்திருக்கின்றார். இவர் ஒரு பெரிய மகான் என்றார். மற்றொருவரோ வரப்பு மீது தலை வைத்து தலையணை வைத்து தூங்குவது போல் சுகம் இவருக்கு கேட்கிறதே. இவர் பெரிய மகானா? என கேலி செய்தார். உடனே பட்டினத்தார் தலையை கீழே இறக்கி வைத்து படுத்தார்.

    அதே மனிதர்கள் மீண்டும் அவ்வழியே திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை கீழே வைத்து படுத்த அவரைப்பார்த்து ஒருவர், இவர் ஒரு மகானா? நாம் பேசுவதை ஒட்டு கேட்கிறார் என்றார். நாம் என்ன செய்தாலும் இந்த உலகம் நம்மை விமர்சிக்கும் கேலிப்பேசும். அனைத்தையும் கடந்து நேரிய முறையில் வாழ்வதே நமது மனித வாழ்வாக அடைந்திட வேண்டும். இறையருளின் காலமாகிய இத்தவக்காலத்தில் நம்மோடு இணைந்து வாழ்கின்ற மக்களின் கருத்துக்களுக்கு செவிமடுப்பதற்கு நாம் அழைக்கப்படுகின்றோர்.

    சிறு குழந்தைகளிடம் இருந்தும் ஞானமிக்க காரியங்கள் வெளிப்பட முடியும் என்பதனை நாம் ஏற்றிட வேண்டும். காலத்தின் தேவைக்கேற்ப முடிவுகள் எடுக்கின்ற போது அனைவரோடும் இணைந்து ஒன்றிணைந்து செயல்படுவதற்கு பக்குவப்பபட வேண்டும். உலகில் மாபெரும் சிந்தனையாளராக போற்றப்படுகின்ற சாக்ரடீஸ், நான் அறிந்தது கொஞ்சமே, இன்றும் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது என்ற மனப்பான்மையோடே தனது வாழவினை நகர்த்துவதற்கு ஆசைப்பட்டார். அதனை சீடர்களுக்கு கற்றளித்தார். நாமும் இத்தகைய மனப்பான்மையினை உள்வாங்கி தொடர்நது வாழ்வினை கொண்டாடுவோம்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறைமாவட்டம்.
    Next Story
    ×