search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தேவ ஆட்டுக்குட்டி

    இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் அவரைப்பற்றி கேள்விப்பட்ட பலர் அவரிடத்திலே வந்து அநேக அற்புதங்களையும், நன்மைகளையும் பெற்றுச்சென்றனர்.
    இயேசு கிறிஸ்து உலகத்தில் இருந்த நாட்களில் அவரைப்பற்றி கேள்விப்பட்ட பலர் அவரிடத்திலே வந்து அநேக அற்புதங்களையும், நன்மைகளையும் பெற்றுச்சென்றனர். ஆனால் அவர் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து தன்னை மேசியாவாக வெளிப்படுத்துவதற்கு முன்னரே அவரை பற்றிய சரியான வெளிப்படுத்தலோடு அவரை அடையாளம் கண்டுகொண்டவர் யோவான் ஸ்நானகனே. இயேசுவுக்கு வழியை ஆயத்தம் பண்ண வந்தவரே இந்த யோவான் ஸ்நானகன்.

    இயேசுவை ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தும்போது நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றும், தூற்றுக்கூடை அவரது கையில் இருக்கும் என்றும், கோடரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது என்றும், மேசியாவாகிய இயேசு மனுக்குலத்தை நியாயம் விசாரிக்க வரப்போகிறார் என்றும் எச்சரிப்பின் செய்தியை அறிவித்து வந்த யோவான் அவரைக் கண்டபோது நியாயம் தீர்க்க அல்ல, நியாயத்தீர்ப்பிலிருந்து விடுவிக்க பலியாக வந்த தேவ ஆட்டுக்குட்டி என்று காண்கிறார்.

    யோவான் ஸ்நானகன் அந்த தெளிவான வெளிப்படுத்துதலை பெற்றவராக அவரைக் குறித்து சாட்சி கொடுக்கும்போது அவர் தன்னிடத்தில் வந்தபோது “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி“ (யோவான்:1:29).யோவான் ஸ்நானகன் இயேசுவை உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கிறவராகவும், தேவ ஆட்டுக்குட்டியாகவுமே கண்டு அதையே உலகத்தில் சாட்சியாகவும் அறிவித்தார். பழைய ஏற்பாட்டின் பலி முறைகளின்படி பாவம் செய்த மனிதன் தன்னுடைய பாவங்களுக்காக பாவநிவாரண பலியாக பழுதற்ற ஆட்டுக்குட்டியை தெரிந்துகொண்டு அதை தேவ சமூகத்தில் பலியிட்டு அந்த பலியின்மூலம் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவனாகிறான். அது போல மனிதனின் பாவங்களையெல்லாம் சுமந்து தீர்க்கும்படியாக தேவ ஆட்டுக்குட்டியாக வெளிப்பட்டவர் இயேசு கிறிஸ்து.

    இயேசு என்னும் பரிசுத்த தேவ குமாரன் பாவம் செய்த மனித குலத்தை அழிக்க வராமல் பாவங்களை சுமந்து தீர்த்து மனிதகுலத்திற்கான விடுதலையைக் கொடுக்கவே வந்தார். யோவான் ஸ்நானகன் கொடுத்த இந்த சாட்சியானது பரிசுத்த வேதாகமத்தின் மையப்பொருளாகவும், அவரைக் குறித்த நற்சாட்சியின் எல்லையாகவும் இருக்கிறது. இயேசு உலக மக்களின் பாவங்களை சுமந்து தீர்க்கிறவர். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றவர் எல்லோருக்கும் இளைப்பாறுதலைத் தரும்படியாக எல்லோருடைய பாவங்களையும் சுமந்து தீர்க்கவே வந்தார்.

    பாவம் செய்த யாவருக்கும் விடுதலை கொடுக்க பலிகடாவாக தன்னையே ஒப்புக்கொடுத்தவர் இயேசு. இயேசு எனக்காகவும் பலியாகி என் பாவங்களையும் சுமந்து தீர்த்தார் என்று விசுவாசத்தோடு அவரை நோக்கிப்பார்க்கும் யாவருக்கும் விடுதலையைக் கொடுக்க அவர் போதுமானவர். இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் இந்நாட்களில் அவரை நோக்கிப்பார்ப்போம். தேவன் தாமே நமக்கு இளைப்பாறுதலையும், விடுதலையையும் கட்டளையிடுவாராக. ஆமென்.

    போதகர்.டேவிட், சிட்டி ஏ.ஜி. சபை, திருப்பூர்.
    Next Story
    ×