search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பாவ மன்னிப்பு

    சிலுவையில் அவர் நமக்காக பெற்றுத் தந்த இந்த பாவமன்னிப்பு என்கிற இந்த விலையேறப் பெற்ற விடுதலையை நாம் எண்ணி பார்ப்போம்.
    கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை தியானித்து வரும் இந்த லெந்து நாட்களில் அவருடைய சிலுவை மரணத்தின் மூலம் மனுக்குலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம் மன்னிப்பு.

    தேவன் படைத்த உலகத்தில் தோற்றுவிக்கப்பட்ட மனிதகுலமான ஆதாமும், ஏவாளும் பாவம் செய்ததின் விளைவாக இந்த பூமி பாவப்பட்ட பூமியாக மாறிப்போனது. ஜனங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் புறாக்களையும், ஆடு, மாடுகளையும் பலி கொடுத்தார்கள். மோசேயின் நியாயப்பிரமான கட்டளைப்படி பாவம் செய்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும் என்று கட்டளையாயிருந்தது. அதனால் பாவத்தில் இருந்து விடுபட முடியாமல் மக்கள் மரித்துப்போய் கொண்டிருந்தனர்.

    அதை கண்ணோக்கிப் பார்த்த தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார். அவர் வாழ்வதற்காக அல்ல. நம் எல்லாருடைய பாவங்களையும் ஏற்றுக்கொள்ளும்படியாக அவர் சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கையில் “போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய (இயேசுவின்) விலாவில் குத்தினான். உடனே ரத்தமும், தண்ணீரும் புறப்பட்டது. (யோவான் 19:34). ரத்தம் என்பது பாவமன்னிப்பை குறிக்கிறது. தண்ணீர் என்பது தேவ அன்பை குறிக்கிறது. இயேசுவின் ரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. (எபேசியர் 1:7). இது தேவன் நம்மீது வைத்த அன்பை விளங்கச் செய்கிறது.

    லூக்கா 7-ம் அதிகாரத்தில் பாவியான ஒரு பெண்ணை கல்லெறிந்து கொலை செய்ய வேண்டுமென ஒரு மிகப் பெரிய கூட்டமே காத்திருந்தது. ஆனால் இயேசுவோ அவள் பாவத்தை பாராதபடி அவள் பாவத்தில் இருந்து மனம் திரும்புகிறாள் என்பதை அறிந்து, உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லெறியுங்கள் என்று சொன்ன போது அங்கு ஒருவருமில்லை. அவர்கள் பாவத்திலிருந்து மனந்திரும்பாமல் போனார்கள். ஆனால் இந்த பெண்ணோ பாவத்திலிருந்து விடுதலை பெற்றாள். (லூக்கா27:42,43)-ல் இயேசுவோடு கூட சிலுவையில் அறையும்படி 2 குற்றவாளிகளில் ஒருவன் கடைசி மணி வேளையில் தன்னுடைய பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்ட வேளையில் இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து இன்றைக்கு என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்று சொல்லுகிறேன் என்று சொல்லி பரதீசுக்கு அழைத்து சென்றவர் நம் இயேசு கிறிஸ்து.

    சிலுவையில் அவர் நமக்காக பெற்றுத் தந்த இந்த பாவமன்னிப்பு என்கிற இந்த விலையேறப் பெற்ற விடுதலையை நாம் எண்ணி பார்ப்போம். இந்த தியான நாளிலே அவர் பாடு மரணங்களை நினைவு கூர்ந்து அவருக்கு சாட்சியாய் வாழ்வோம். இந்த பாவமன்னிப்பு என்கிற பூவாகிய நாம் தேவ தோட்டத்திலே என்றென்றும் மலர்ந்திருப்போம்.

    பாஸ்டர். ரவிக்குமார்.

    ஏ.ஜி. சபை, செட்டிபாளையம், திருப்பூர். 
    Next Story
    ×