search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    சிலுவை நாதர் இயேசு

    இயேசு கிறிஸ்து என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது முதலாவது அவர் மனுக்குலத்தின் மேல் வைத்த தேவ அன்பு. இரண்டாவது அவர் சுமந்த சிலுவை.
    இயேசு கிறிஸ்து என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது முதலாவது அவர் மனுக்குலத்தின் மேல் வைத்த தேவ அன்பு. இரண்டாவது அவர் சுமந்த சிலுவை. கொடுமையான கொலை கருவியாக இருந்த சிலுவையை இயேசு, மனிதனின் பாவங்களுக்காக சுமந்து அதில் அறையப்பட்ட உடன், சிலுவை புனிதச் சின்னமாக மனுக்குலத்தால் போற்றப்படுகிறது.

    நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்து போகும். (1 கொரி 13:10) என்ற வேத வாக்குக்கு உதாரணமாக, மனித குலத்தின் பாவங்களை நீக்கி அவர்களை மரணத்தின் கோரத்தில் இருந்து விடுதலையாக்க பாவ நிவாரணப் பலியாக தன்னையே சிலுவையில் ஒப்புக்கொடுத்து மரித்து, உயிர்த்து இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். நாம் பாவங்களுக்கு செத்து நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள் (1பேதுரு 2:24) எனக்கூறிய பேதுருவின் வார்த்தை எவ்வளவு உண்மை என்பதை மனுக்குலம் உணர்ந்து கொண்டது. தொடர்ந்து பாவம் செய்து மனிதன் மரணிப்பதை விரும்பாத இயேசு பாவத்தின் விளைவுகளை அவனுக்கு உணர்த்தி பாவமில்லாத வாழ்வு மனிதனை இறைவனோடு இணைக்கும், பரலோகம் சேர்க்கும் என்பதை தெரிவிக்க பூமியில் மனிதனாக பிறப்பெடுத்து பாவமே செய்யாத பரிசுத்த தெய்வமாக வாழ்ந்து, அற்புதங்களாலும், அடையாளங்களாலும் மனுக்குலத்திற்கு நன்மை செய்து தேவ அன்பை விளங்கப்பண்ணினார்.

    பயம், கவலை, துன்பம், வேதனை, வருத்தம், மனபாரம், நோய் போன்ற துன்பங்கள் மனிதனை வாட்டி வதைப்பதற்கு பாவமே காரணம் என்பதை உணர செய்து பாவ இருளை அகற்றும்படி தன்னையே சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்து மரணத்தை ஜெயித்தார். நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் (யோவான் 14:6) என்ற மறைபொருளை மனிதனுக்கு வெளிப்படுத்தி ஜீவனுக்கு அழிவில்லை என்பதை அறிவித்து இளைப்பாறுதலின் ரகசியத்தை வெளிப்படுத்தினார்.

    மனுக்குலத்தின் பாவத்தின் கொடூரத்தை முழுவதையும் தனது சிலுவை மரணத்தால் வெற்றி கொண்டு தான் படைத்த மனிதன்சமாதானத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றி பரலோகப் பாதையை திறந்து கொடுத்த நம் ஆண்டவரின் அன்பை நினைவுகூறுவோம். நாம் பெற்ற அவருடைய அந்த தேவ அன்பை, சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்வோம், பரிமாறுவோம். நமக்காக தனது ஜீவனை பலியிட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நினைவுகூறுவோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

    போதகர் மனோவா எம்.முத்துக்குமார்,

    திருப்பூர்.
    Next Story
    ×