search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தவக்கால சிந்தனை: உபவாசத்தின் நோக்கம்

    நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும்.
    உபவாசம் என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தையாகும். உப என்றால் இணை என்றும், வாசம் என்றால் வாழ்தல் என்றும் பொருள். உபவாசம் என்றால் இணைந்து வாழ்தல் என்று அர்த்தமாகும். நாம் கடவுளோடு இணைந்து வாழ்வதே உண்மையான உபவாசம். நம் கவனத்தை கர்த்தரை நோக்கியும் கர்த்தரின் கவனத்தை நம்மை நோக்கியும் திருப்புவது தான் உபவாசத்தின் நோக்கம் ஆகும். உபவாச ஜெபம் என்பது எப்போதோ நடக்கின்ற ஒன்றாக அல்ல. எப்போதும் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும்.

    இந்த தவக்காலத்தில் உபவாசத்தை அதிகமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. விசேஷ நாட்களில் நாம் சிறப்பு உணவை உண்பது போலவும், சிறப்பான உடையை உடுத்துவது போலவும் இந்த நாட்களில் அதிகமாக உபவாசம் இருக்க வேண்டும். “தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்” என்ற பாடலுக்கேற்ப இந்த நாட்களில் இன்னும் அதிகமாக கர்த்தரிடம் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.

    இந்த உபவாச நாட்களில் நாம் விட்டு விடுதல், பெற்றுக்கொள்ளுதல் என்ற இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மைப் பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் நிரந்தரமாக விட்டு விட வேண்டும். அதேபோல் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான நற்குணங்களை நிலையாக பெற்றுக்கொள்வதும் மிகவும் அவசியமாகும். மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்புக்கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தையே கர்த்தர் கேட்கிறார்.

    நம் தவறுகளுக்காக நம்மை தண்டிக்க நினைக்கும் கர்த்தரின் மனதை இம்மூன்று செயல்களும் மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெபத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. உபவாசம், ஜெபம், விசுவாசம் இம்மூன்றும் ஒன்று சேரும் போது அற்புதம் நிகழ்கிறது.

    இதுவரை நடக்காத நற்காரியங்கள் நடக்க வேண்டும் என்றால், நம் வாழ்வில் ஒரு நல்ல அற்புதம் நிகழ வேண்டும் என்றால் நாம் உபவாசம் இருந்து விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும். கொலோசேயர் 4-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், ‘காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று அப்போஸ்தலர் தூய பவுல் மூலம் ஆண்டவர் நம்மை அழைக்கிறார். இந்த அழைப்பிற்கு கீழ்படிந்து நாம் இந்த உபவாசக் காலங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக ஆமென்.

    சகோதரி. கேத்ரின், திருப்பூர்
    Next Story
    ×