search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தவக்கால சிந்தனை: இனிமையாக பேசுங்கள்

    இயேசுவை போல நம்முடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு பயன் உள்ள இனிமையான வார்த்தையாக மாற்ற தேவன்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.
    ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். அவரை பார்க்க போதகர் ஒருவர் வந்தார். உடலும், மனமும் சோர்வுற்று காணப்பட்ட நோயாளியை பார்த்த போதகர், அங்கிருந்தவர்களை பார்த்து, நாம் இவருக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் எனக்கூறி ஜெபம் செய்தார். அங்கிருந்த அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டவருக்காக ஜெபம் செய்ய ஆரம்பித்தனர். பின்னர் போதகர் நோய்வாய்பட்டவரை பார்த்து, இத்தனை பேரும் உங்களுக்காக ஜெபித்துள்ளார்கள். இறைவனின் அருளால் நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும் என்று கூறினார்.

    அந்த இடத்தில் இருந்த ஒருவர் திடீரென போதகரை பார்த்து, வெறும் வார்த்தைகள் போய் அவரை குணப்படுத்துமா? எனக்கூறி சிரித்தார். அதற்கு போதகர், இந்த கூட்டத்திலேயே நீங்கள் தான் மிகப்பெரிய முட்டாள் என கூறினார். இதைக்கேட்டதும் அவர், நீங்கள் போதகராக இருந்து கொண்டு இப்படி என்னை பேசுகிறீர்கள், உடனே என்னிடம் மன்னிப்பு கேளுங்கள். இல்லையென்றால் உங்களை என்ன செய்வேன் என்று தெரியாது எனக்கூறி அடிக்க பாய்ந்தார்.

    ஆனால் போதகரோ, பதற்றமே இல்லாமல், அங்கிருந்தவர்களிடம் நான் பேசிய இந்த கடுமையான வார்த்தை அவரது மனதை பாதித்து என்னை அடிக்கிற அளவுக்கு அவரை மாற்றி உள்ளது என்றால், நம்முடைய வாயில் இருந்து ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டி கடவுளிடம் வேண்டிக்கொண்டால் கடவுள் நமக்கு நல்லது செய்யமாட்டாரா? என்று கேட்டார். எனவே நாம் ஜெபித்த ஜெபத்தை கடவுள் கேட்பார், அவரை கண்டிப்பாக குணப்படுத்துவார் என்று கூறினார். உடனே அந்த கோபப்பட்ட நபர் வெட்கி தலைகுனிந்தார்.

    இதே போல தான் இயேசுவும் இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் தன்னிடம் உதவிக்காக, உடல் நலம் பெறுவதற்காக தன்னை நாடி வந்தவர்களிடத்தில் இனிமையான வார்த்தைகளேயே எப்போதும் பயன்படுத்தினார். இது குறித்து வேதாகமத்தில் லூக்கா 8-ம் அதிகாரம் 48-ம் வசனத்தில், மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது, அமைதியுடன் போ, என்று கூறப்பட்டுள்ளது. மேலும் லூக்கா எழுதின சுவிஷேசத்தை முழுமையாக படித்தால் அதில் அனேக வசனங்கள் வார்த்தைகள் குறித்தும், நம்பிக்கை குறித்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

    ஆம், தேவ பிள்ளைகளே, தீய வார்த்தைகளை தவிர்ப்போம்.நாம் பேசுகின்ற இனிமையான வார்த்தைகளே பிறரை உடல் நலம் பெற செய்ய இயலும். எனவே இயேசுவை போல நம்முடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களுக்கு பயன் உள்ள இனிமையான வார்த்தையாக மாற்ற தேவன்தாமே நாம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

    சகோ.சாம்ராஜ், சுவிஷேச ஊழியம், பல்லடம்.
    Next Story
    ×