search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    தவக்கால சிந்தனை: தாழ்மை

    இந்த தவக்காலத்திலே இயேசுவை பற்றி நாம் ஒவ்வொருவரும் தியானித்து வருகிறோம். ஆம் தேவ பிள்ளைகளே நாமும் தாழ்மை மனப்பான்மையோடு இருப்போம் தேவ கிருபையை பெற்றுக்கொள்வோம்.
    பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தற்பெருமை என்ற மனப்பான்மை காணப்படும். இப்படி பெருமை உள்ள மனிதன் எப்போதுமே எனக்கு எல்லாம் தெரியும், ஒருவனும் எனக்கு போதிக்க வேண்டாம் என்று சொல்லி எதிர்த்து நிற்பான். மேலும் கோபம், எரிச்சல், பேராசை, பொறாமை போன்ற பல்வேறு குணங்கள் அவனிடத்தில் தோன்றும். எனவே அவன் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கொந்தளிக்கும் கடலைபோல் காணப்படும்.

    இதேபோலதான் ராஜாவாகிய சவுல் தன்னைத்தானே உயர்த்திய போது பரிசுத்த அபிஷேகத்தையும் தேவ பாதுகாப்பையும் இழந்தான். இதனால் தன் ஆயுதத்தால் மரித்துப்போனான். பெருமையுள்ளவர்களுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்கின்றார் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் தாழ்மையான குணம் கொண்ட ஒருவனிடம் போய் அவனை எவ்வளவு கேவலமாக பேசி அவமானப்படுத்தினாலும் அவனிடத்தில் இருந்து எந்த ஒரு கோபமோ, எரிச்சலோ காண முடியாது. தாழ்மையுடையவர்கள் சாந்தமும், சமாதானமும் நிறைந்த வார்த்தைகளையே பேசுவார்கள். தாழ்மை என்பது ஓர் இளைப்பாறுதலுக்கான ஜீவிதம். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் இரக்கமும் கிருபையும் அளிக்கிறார்.

    அவர்களின் வாழ்க்கை முழுவதையுமே தேவன் மறுரூபப்படுத்தி செழித்தோங்கச் செய்கிறார். வேதாகமத்தில் 1 பேதுரு 5-ம் அதிகாரம் 5-ம் வசனத்தில், மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள், பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இதே போல தான் இயேசு சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார். எனவே பிதாவானவர் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தினார். எனவே தான் இந்த தவக்காலத்திலே இயேசுவை பற்றி நாம் ஒவ்வொருவரும் தியானித்து வருகிறோம். ஆம் தேவ பிள்ளைகளே நாமும் தாழ்மை மனப்பான்மையோடு இருப்போம் தேவ கிருபையை பெற்றுக்கொள்வோம்.

    அல்போன்ஸ், கோவில்வழி, திருப்பூர்.
    Next Story
    ×