search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் மக்கள் வெள்ளத்தில் தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் மக்கள் வெள்ளத்தில் தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழாவையொட்டி 4 தேர்கள் பவனி நடந்தது. திருவிழாவை காண ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10- நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் திருப்பலி மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. ஒவ்வொரு நாள் விழாவையும் ஒவ்வொரு அமைப்பினர் நடத்தினார்கள்.

    விழாவில் கடைசி 3 நாட்கள் தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இதே போல 8-ம் நாள் மற்றும் 9-ம் நாள் திருவிழாவன்று இரவில் தேர்பவனி நடந்தது. அப்போது தேரின் பின்னால் மக்கள் கும்பிடு நமஸ்காரம் நேர்ச்சை நிறைவேற்றினார்கள்.

    இந்த நிலையில் 10-ம் நாள் திருவிழாவான நேற்று பகலில் தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட 4 தேர்களில் புனித மிக்கேல் அதிதூதர், புனித செபஸ்தியார், புனித சவேரியார் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்டு வீதிகளில் வலம் வந்தன. பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்களானது வடிவீஸ்வரம், கம்பளம் சந்திப்பு, ரெயில்வே ரோடு சந்திப்பு வழியாக கேப் ரோடு வந்து பின்னர் மீண்டும் பேராலயம் சென்றது.

    அப்போது அந்தந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பிரார்த்தனை செய்தனர். மேலும் உப்பு, மிளகு வைத்து வணங்கினார்கள். கூட்டத்தின் மத்தியில் தேர் ஆடி அசைந்து சென்ற காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தார்கள். புகைப்படமும் எடுத்து கொண்டார்கள். பின்னர் மாலையில் தேர்கள் மீண்டும் நிலைக்கு வந்தன.

    இதைத் தொடர்ந்து தேரில் திருப்பலி நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு புனித சவேரியார் பெருவிழா திருப்பலி நடந்தது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கினார். இதனையடுத்து 8 மணிக்கு மலையாள திருப்பலி நடைபெற்றது. புனித சவேரியார் பேராலய 10-ம் நாள் திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    எனவே மாவட்டம் முழுவதிலும் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு வந்தனர். ஆனால் காலையில் சாரல் மழை பெய்தது. எனினும் மழையை பொருட்படுத்தாது மக்கள் பேராலயத்தில் குவிந்தனர். தேர்பவனியையொட்டி பேராலயம் அமைந்துள்ள கேப் ரோடு மற்றும் செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் பேராலயத்துக்கு வந்து செல்ல வசதியாக இருந்தது. இந்த சாலைகளில் எல்லாம் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×