என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.
    X
    மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றப்பட்ட போது எடுத்த படம்.

    மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய பெருவிழா

    மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூரில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கேரள மாநிலம் பாலக்காடு சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித அந்தோணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

    பவனியானது ஆலய வளாகத்தை வந்தடைந்ததும், அங்குள்ள 70 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் மேல்நாரியப்பனூர் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து வருகிற 13-ந்தேதி வரை தினசரி காலை, மாலை நேரத்தில் கூட்டுத் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையும், இரவில் தேர்பவனியும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 13-ந் தேதி இரவு 10 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நடைபெற உள்ளது.

    பின்னர் 14-ந் தேதி திருத்தல அதிபர் பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், காரியக்காரர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்து வருகின்றனர்.

    மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு வரும் கிறிஸ்தவர்களின் வசதிக்காக 12 மற்றும் 13-ந் தேதி மட்டும் மேல்நாரியப்பனூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லும். மேலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், விருத்தாசலம், ஆத்தூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    Next Story
    ×