என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய பெருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது
    X

    எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலய பெருவிழா வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா என்ற இடத்தில் உள்ள தூய ஜார்ஜியார் ஆலய பெருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் எடத்துவா என்ற இடத்தில் உள்ள தூய ஜார்ஜியார் ஆலயம் மிகவும் பழமையும், சிறப்பும் வாய்ந்தது. இந்த ஆலய பெருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுதொடர்பாக திருவிழா பேரவை நிர்வாகிகள் ராம்சே, பில்பி மாத்யூ, தோமஸ் ஜோசப், மனோஜ் மாத்யூ ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எடத்துவா தூய ஜார்ஜியார் ஆலயம் கட்டப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டன. பழமையை எடுத்துரைக்கும் ஆலயமாக இது திகழ்கிறது. ஆலய பெருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 14-ந் தேதி வரை நடப்பது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஆலயம் கேரளாவில் இருந்தாலும் விழாவில் குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மக்கள் தான் அதிகளவில் கலந்து கொள்வார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக புதிதாக 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. மேலும் குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    ஏப்ரல் 27-ந் தேதி முதல் மே 7-ந் தேதி வரை தமிழ் முறைப்படி திருவிழா நடைபெறும். அதன் பிறகு கேரள முறைப்படி திருப்பலி நிறைவேற்றப்படும். விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் திருப்புகழ்மாலை ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன. விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் தக்கலை மறைமாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் உள்பட 9 ஆயர்கள் பங்கேற்கின்றனர். மே 7-ந் தேதி திருவிழா மிகவும் முக்கியமானது.

    அன்றைய தினம் காலை 6 மணிக்கு சங்கனாசேரி உயர் மறைமாவட்ட பேராயர் மார் ஜோசப் தலைமையில் நவநாள், திருப்புகழ்மாலை மற்றும் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. 7.30 மணிக்கு அருட்தந்தை ஜார்ஜ், திருப்பலி நிறைவேற்றுகிறார். 9 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட உதவி ஆயர் கிறிஸ்துதாஸ் தலைமையில் மலையாளம் மற்றும் லத்தீன் வழிபாட்டு முறையில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மதியம் 3 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலை 5 மணிக்கு திருப்பவனி நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினர். பேட்டியின்போது பங்குதந்தை தாமஸ் பவ்வத்து பரம்பில், ஜினு ஆகியோர் உடனிருந்தார்.
    Next Story
    ×