என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாதங்களை அல்ல, மனப்பாங்கினை கழுவுங்கள்
    X

    பாதங்களை அல்ல, மனப்பாங்கினை கழுவுங்கள்

    அன்பு செய்வதே என் கட்டளை என்ற இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற நம் மனப்பாங்கினை கழுவி, பலியாகி நடமாடும் நற்கருணைகளாக வாழ இன்று முடிவெடுப்போம்.
    பணம், பொருள், பதவி, பட்டம் எதுவானாலும் இன்னும் வேண்டும் என்ற பேராசைக்கு உட்பட்டு தான் மனித மனம் ஏங்குகிறது. ஆனால் பதவி, பட்டம், பகட்டு இவையெல்லாம் வாழ்வின் இடையில் வருபவை. நிரந்தரமற்றவை. பணிவு, எளிமை இவையே நிரந்தரம். பணிவே பாரை ஆளும்.

    இறைத்தன்மையை விட்டு மனிதரானார் இயேசு, முற்றும் துறந்தார் மகாவீரர், பற்று துறந்து பாரை வென்றார் புத்தர், அகிம்சையால் அகிலத்தை வென்றார் மகாத்மா காந்தி. இவர்களின் வாழ்வு நமக்கு சுட்டிக்காட்டும் பாடம், பணிவு உலகை வெல்லும் என்பதே.

    அரசியல், ஆன்மிகத்தில் எளிமையான மனிதர்களை காண்பது அரிதாகி விட்டது. இத்தகைய சூழலில் ‘புனித வியாழன்‘ ஆணவத்தை சுட்டெரிக்கும் பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும்.

    இயேசுவின் காலத்திலேயே நீயா? நானா? யார் பெரியவர்? என்கிற ஆணவப்போட்டி தொடங்கி விட்டது. அதனை ஆராய்ந்து இயேசு அதற்கு ஒரு செய்முறை விளக்கம் அளித்தார். அதுதான் பாதம் கழுவும் சடங்கு. ஆண்டவரே, நீரோ என் பாதங்களை கழுவுவது? என்ற பேதுருவின் வார்த்தை, ‘கடவுளாக இருக்கும் நீரா என்னை கழுவுவது?, கடவுள் தன்மையில் உள்ள நீரா என் பாதங்களை தொடுவது?‘.

    வேண்டாம், என்னை தொடாதே என்ற வார்த்தைகள், இயேசு தன் மனப்பான்மையில் இருந்து இறங்கி மனிதத்தன்மைக்கு வந்ததை காட்டுகிறது. அதிலும், அடிமையாக தன் சீடர்களின் பாதங்களை கழுவி ஒரு குரு என்றால், அவர் பலியாக வேண்டும் என்பதை சுட்டி காட்டுகிறது.

    அன்பு செய்வதே என் கட்டளை என்ற இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்ற நம் மனப்பாங்கினை கழுவி, பலியாகி நடமாடும் நற்கருணைகளாக வாழ இன்று முடிவெடுப்போம். ஏனோ, தானோவென்று நற்கருணையை பெறுவது வெறும் சடங்கு. மாறாக, நற்கருணையை உண்ணும் நாம் உறவு வாழ்வில், சமூக வாழ்வில், பிறருக்காக பணிந்து பலியாகி வாழ வேண்டும். அத்தகைய எண்ணம் இன்று மேலோங்க வேண்டும். ஏனெனில் பணிவே உலகை வெல்லும்.

    அருட்பணி. எஸ்.ஜான் நெப்போலியன், பங்குத்தந்தை,

    குட்டத்து ஆவரம்பட்டி, திண்டுக்கல்.
    Next Story
    ×