என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: நிலையான மனமாற்றம்
    X

    தவக்கால சிந்தனை: நிலையான மனமாற்றம்

    மனமாற்றம் என்பது தன்னிலிருந்தும், அடுத்தவர்களிடம் இருந்தும், இறைவனிடம் இருந்தும் அந்நியப்பட்ட நிலையிலிருந்தும் திரும்பி, உண்மையாக தன்னை அறிந்து, அடுத்தவருக்காக இறைவனில் மனம்விரும்பி வாழ்வதாகும்.
    தவக்காலம் என்றால் ஆளுக்கொரு வேஷம், நாளுக்கொரு நடிப்பிற்குரியதல்ல. எல்லாக் காலமும் இறைவன் காலம்தான். எல்லாச் செயல்களும் இறைவனுக்காகத்தான். ஆனால் எந்தக் காலத்தையும்விட தவக்காலத்தைத் திருச்சபை ஏன் முன்னிலைப்படுத்த வேண்டும்? மற்ற காலங்களில் இறைவனின் புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குரிய வசந்தகாலம். அதாவது இறைவனை அறிந்து ஆராதிக்கும் காலம்.

    தவக்காலம் மட்டும்தான் ஒவ்வொருவரும் தன்னை அறிகின்ற காலம். தன் நிறை குறைகளை ஆய்ந்தறிந்து விடுபடுகின்ற காலம். பாவ வாழ்க்கையை தணிக்கை செய்து இறைவனிடம் நற்சான்று பெறுகின்ற காலம். எதிர்காலத்தில் குற்ற கிருமிகள் தொற்றி தொடராமல் இருக்க உறுதி எடுக்கும் காலம். எனவே தனது பாவங்களை பட்டியலிட்டு அதில் எதையாவது ஒன்றை நிரந்தரமாக (40 நாள்களுக்கு மட்டுமல்ல) எவன் விட்டுவிடுகின்றானோ அவன்தான் மனிதன். (மாற். 1:15)

    நம்மை மீட்க வேண்டுமென்ற லட்சிய வெறியில் ஒரு எள் முனையளவு கூட பின்வாங்கியதில்லை ஏசு. நம்முடைய அக்கிரமங்கள், அகந்தை, ஆணவங்களைத் தாம் புதையுண்ட குழிக்குள் உரமாகப் போட்டு அதில் முளைத்தெழுந்த ஞான விருட்சகம் ஏசு. அவருடன் நாமும் உயிர்க்க வேண்டுமானால் நாம் “பருவகால “ பக்தர்களாக வாழ்ந்து பயனில்லை. எல்லாக் காலத்தையும் அவருக்கு ஏற்புடையதாக்க முயலவேண்டும். அதற்கு இறைவனை எண்ணித் தன்னை வருத்திக் கொள்வதைவிட தன்னை எண்ணிப் பார்த்து தவறுகளை திருத்திக் கொள்வது ஒன்றே உண்மையான தவமாகும். (மத். 3:2)

    கடவுள் எல்லாக் காலத்தையும் தமது இணையற்ற அன்பால் ஆசீர்வதிக்கக்கூடியவர். எனவே இத்தகைய எல்லையற்ற ஆசீர்வாதத்தால் ஆட்கொள்ளப்பட வேண்டுமென்றால் நிலையான மனமாற்றம் தேவை. மனமாற்றம் என்பது தன்னிலிருந்தும், அடுத்தவர்களிடம் இருந்தும், இறைவனிடம் இருந்தும் அந்நியப்பட்ட நிலையிலிருந்தும் திரும்பி, உண்மையாக தன்னை அறிந்து, அடுத்தவருக்காக இறைவனில் மனம்விரும்பி வாழ்வதாகும். (எசாயா 55:7) உண்மையான மனமாற்றம் என்பது ஒருவரின் சிந்தனை, உணர்வு, செயல்பாடு, உறவுமுறை ஆகியவற்றில் அடங்கி உள்ளது.

    எனவே மனித வாழ்வின் எதிர்காலம் என்பது நிகழ்காலத்தில் நாம்செலுத்தும் வாழ்க்கையின் போக்கினால் அமைகின்றது என்பதால் ஒவ்வொரு நிகழ் காலத்தையும் நாம் பொறுப்பாகப்பயன்படுத்தி நல்லுறவை வளர்த்து விடுதலை உணர்வுடன் மகிழ்ச்சியில் திளைத்து (லூக்.19:1-10) இறையமைதியை அன்றாடம் சற்று நேரம் சுவைத்துப் பார்ப்போம். நம்மில் நிகழும் மனமாற்றம் அன்றாட வாழ்வு நிகழ்வுகளில் குன்றின்மீது விளக்காக வெளிப்படட்டும்.

    - யூஜின் அமலா, இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்.
    Next Story
    ×