என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கச்சத்தீவு புனித அந்தோணியார் சொரூபத்தியும், தேர் பவனி நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.
    X
    கச்சத்தீவு புனித அந்தோணியார் சொரூபத்தியும், தேர் பவனி நடைபெற்றதையும் படத்தில் காணலாம்.

    கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகத்தில் இருந்து நீதிபதி உள்பட 1920 பேர் பங்கேற்றனர்.
    இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் இருநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் கலந்து கொள்வதற்காக, ராமேசுவரத்தில் 62 படகுகள் மற்றும் 2,103 பேர் பெயர் பதிவு செய்திருந்தனர்.

    நேற்று காலை 6 மணி முதல் சுங்க இலாகாவினர், வருவாய்த்துறையினர், புலனாய்வு துறையினர், மற்றும் காவல் துறையினர் அனைத்து படகுகளையும் சோதனையிட்டனர். அதன்பின்னர் பங்குத்தந்தை அந்தோணிச்சாமி தலைமையில் 60 படகுகளில் 1,532 ஆண்கள், 336 பெண்கள், 52 குழந்தைகள் என மொத்தம் 1,920 பேர் புறப்பட்டு சென்றனர். தமிழக பக்தர்கள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சுமார் 40 அடி நீளம் கொண்ட தேக்கு மரத்தால் ஆன கொடிமரம், 4 அடி உயரமுள்ள அந்தோணியார் சொரூபம், நற்கருணை ஆசீர் சிலுவை ஆகியவற்றை படகில் எடுத்துச்சென்றனர்.

    மாவட்ட கலெக்டர் நடராஜன் வழியனுப்பி வைத்தார். நேற்று மதியம் 12 மணிக்குள் அனைத்து படகுகளும் சோதனைக்கு பின்னர் புறப்பட்டு சென்றன. கச்சத்தீவு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழியும் புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற பக்தர்கள் பிற்பகல் 3 மணி அளவில் கச்சத்தீவை அடைந்தனர்.


    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து நேற்று பக்தர்கள் புறப்பட்ட காட்சி.

    அங்கு இலங்கை கடற்படையினர் இவர்களை சோதனை செய்தனர். தொடர்ந்து இங்கிருந்து கொண்டு செல்லப்பட்ட கொடிமரம் நடப்பட்டு மாலை 4.30 மணி அளவில் இருநாட்டு பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் இலங்கை பங்குத்தந்தை எமரிபால் தலைமையில் பங்குத்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர்.

    அதனை தொடர்ந்து சிலுவை பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது இருநாட்டு பக்தர்களும் சிலுவையை தோளில் சுமந்து சென்று புனித அந்தோணியார் ஆலயத்தை வலம் வந்தனர். பின்னர் இரவு 7 மணி அளவில் புனித அந்தோணியார் தேர்பவனி நடைபெற்றது.

    இந்த திருவிழாவில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, கதிர்காமம், மன்னார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 4000-க்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 2-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

    திருவிழாவையொட்டி இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கப்பல்களில் கச்சத்தீவு பகுதியில் முகாமிட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழாவையொட்டி ராமேசுவரம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×