என் மலர்

  ஆன்மிகம்

  இயேசு பிரான் நிகழ்த்திய அற்புதம்
  X

  இயேசு பிரான் நிகழ்த்திய அற்புதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இறைமகன் இயேசு இம்மண்ணுலகில் அவதரித்து, பாவச்சேற்றில் உழன்று கொண்டிருக்கும் மக்களைக் காப்பதற்காகவும், தன்னை யார் என்று அடையாளப்படுத்துவதற்காகவும், வியப்படையத்தக்க செயல்களை செய்தார்.
  அந்தக் காலத்தில் இயேசு பிரான் படகில் ஏறி மறுகரைக்குச் சென்று, தன் சொந்த ஊரை அடைந்தார். அப்பொழுது சிலர், முடக்குவாதம் கொண்ட ஒருவரைக் கட்டிலில் வைத்து அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு பிரான் அவர்களிடம் இருந்த நம்பிக்கையை நன்கு உணர்ந்து கொண்டார். முடக்குவாதம் கொண்டவரை நோக்கினார். ‘மகனே! துணிவாக இரு. உன்னிடமுள்ள பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொன்னார்.

  அப்பொழுது அங்கிருந்த மறைநூல் அறிஞர்களில் சிலர், ‘இவன் கடவுளைப் பழிக்கிறான்’ என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டனர். அவர்களுடைய எண்ணங்களை இயேசு பெருமான் உணர்ந்து கொண்டார். பிறகு அவர்களை நோக்கினார். ‘உங்கள் மனதில் தீமையானதைச் சிந்திப்பது ஏன்? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்வதா? எழுந்து நட என்பதா? எது எளிதானது? மண்ணுலகத்தில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

  எனவே முடக்குவாதத்தில் கிடந்தவரை நோக்கி, ‘நீ எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போ’ என்றார். அவரும் எழுந்து அவரது வீட்டிற்குச் சென்றார். இதை நேரில் கண்ட மக்கள் கூட்டம் அச்சம் அடைந்தது. இத்தகைய அதிகாரத்தை மனிதருக்குக் கொடுத்த கடவுளைப் போற்றினர்; புகழ்ந்தனர்.

  மத்தேயு எழுதிய இந்த நற்செய்தியை ஒருகணம் சிந்திப்போம். முதலில் ஒருவருக்கு நம்பிக்கை வர வேண்டும் என்ற கருத்து வெளிப்படுகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர வேண்டும். இத்தகைய நம்பிக்கை, மனிதரை முன்னேற்றப்பாதையிலும், முயற்சியிலும் ஈடுபடுத்தும். நம்பிக்கையோடு ஒரு கூட்டம் இயேசு பிரானை நாடி வந்தது. அக்கூட்டத்தில் வந்த சிலர், எழுந்து நடக்க முடியாத, முடக்குவாதம் கொண்ட ஒருவரைக் கட்டிலில் கிடத்தி தூக்கி வந்தனர். அவர்களின் நம்பிக்கையை இயேசு பெருமான் உணர்ந்து கொண்டார்.

  முடக்குவாதம் கொண்டவரை நோக்கி, அவர் முதன்முதலில் சொன்ன வார்த்தையைக் கவனிப்போம். ‘மகனே! துணிவாக இரு’ என்று அவருக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். துணிச்சல் தேவை என்பது, இவ்வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது. அடுத்து அவர், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்றார். மக்கள் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. மறைநூல் அறிஞர்களில் சிலர்தான், ‘கடவுளையே இவன் பழிக்கிறான்’ என்று வெளிப்படையாகச் சொல்லாமல், தங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டனர்.

  இறைமகன் இயேசுதான், மனிதராக அவதரித்து இருக்கிறார் என்பதை உணரவில்லை. இதை உணர்ந்து கொண்ட இயேசு பிரான், அவர்களைப் பார்த்து, ‘தீமையானதைச் சிந்திப்பது ஏன்?’ என்ற வினாவைத் தொடுத்து விட்டு, ‘எது எளிது?’ என்ற கேள்வியைக் கேட்கிறார். ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று சொல்வது எளிதானதா? எழுந்து நட என்று சொல்வது எளிதானதா?’ என்ற ஒரு வினாவைத் தொடுத்துப் பேசுகிறார்.  ‘மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு’ என்கிறார். ‘நீ, உன் கட்டிலை எடுத்துக் கொண்டு நட’ என்றும் கூறுகிறார். முடக்குவாதக்காரர் எழுந்தார்; நடந்தார் என்ற நற்செய்தியை இதன் மூலம் அறிகிறோம்.

  மக்கள் கூட்டம் இச்செயல்களைக் காண்கிறது. பயப்படுகிறது. ஏனென்றால் இச்செயல்களை இவர்கள் இதுவரைக் காணவில்லை. மறைநூல் அறிஞர்களை விட மக்கள் கூட்டம், இயேசு பிரானின் வார்த்தைகளை நம்புகிறது. விசுவாசம் கொள்கிறது. இப்படி எவ்வளவோ அற்புதங்களை இயேசு பிரான், தன் தந்தையின் திருவுளப்படி செய்கிறார் என்ற செய்தியை அறிய முடி கிறது.

  ஒருவர் பிறரின் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்பதை இயேசு பிரான் பல இடங்களில் சுட்டிக்காட்டுவதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

  இயேசு பிரான் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், படகில் ஏறி மக்களுக்குப் போதிப்பதும், மலையில் ஏறி நின்று பிரசங்கம் செய்வதுமாக இருந்தார் என்பதை நற்செய்தி வாயிலாக அறிகிறோம். மலையும், கடலும் அவருக்கு மக்களை நேரில் சந்தித்து உரையாடும் களமாக அக்காலத்தில் இருந்திருக்கிறது. வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி மக்களிடம் பேசுவதற்கு இவ்விடங்கள், இயேசு பிரானுக்குச் சிறந்த இடம் என்பதை அறிகிறோம். இயேசு பிரானின் எளிய தோற்றமும், அவரின் வார்த்தைகளில் இருந்து வெளிப்படும் ஆணித்தரமான சொல்லும், நம்பிக்கையூட்டும் செயல்பாடுகளும் மக்களை நல்வழிப்படுத்துவதற்கு ஏதுவாக இருந்தன.

  அலங்கார வார்த்தைகளில் மயங்கி தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, பாவச்சேற்றில் உழன்று கொண்டிராமல், நம்பிக்கை தரும் வார்த்தைகளைச் செவி மடுத்து நிறைவாழ்வு வாழ வேண்டும். நிறை வாழ்க்கையின் இறுதி நிலைதான் நித்திய வாழ்வு என்பது இயேசு பிரானின் போதனையின் வெளிப்பாடாக இருக்கிறது.

  இந்த நற்செய்தியைப் படிப்போர், இயேசு பிரான் முடக்குவாதக்காரருக்குச் சொன்னதைப்போல், ‘துணிவாக இருங்கள். எதற்கும் அஞ்சாதீர்கள். நம்பிக்கையில் பலம் பெறுங்கள். துணிவும், நம்பிக்கையும் ஒரு கண்களாக ஒளிரட்டும். நற்சிந்தனை களால் விழித்து எழ வேண்டும்’. மறைநூல் அறிஞர்களில் சிலரைப்போல, முணுமுணுத்துக் கொண்டும், சந்தேகப்பட்டுக் கொண்டும் இருக்கக் கூடாது.

  இறைமகன் இயேசு இம்மண்ணுலகில் அவதரித்து, பாவச்சேற்றில் உழன்று கொண்டிருக்கும் மக்களைக் காப்பதற்காகவும், தன்னை யார் என்று அடையாளப்படுத்துவதற்காகவும், வியப்படையத்தக்க செயல்களை செய்தார்.

  ஆலமரமாய் வேரூன்றி நின்ற தேவ குமாரனுக்கு, விழுதுகளாய் நின்று போதிக்க சீடர்களைத் தயார்ப்படுத்தினார். அவர்களை விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் வேரூன்ற வைத்து விழுது களாய் ஆக்க, அவர்களுக்கு நற்செய்திகளை அருளினார். அவ்வளவு நெருக்கமாக இருந்தும், அவரின் அன்பையும், அற்புதத்தையும் நேரிலே கண்டறிந்தும், யூதாசு என்னும் சீடர், அவரைக் காட்டிக் கொடுத்தார் என்பதும் ஒரு வரலாறுதான். அதனால்தான் வேறோர் இடத்தில் இயேசு பெருமான், தன் சீடரான தோமையாரிடம், ‘கண்டும் விசுவாசிக்கிறவனை விட காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான்’ என்ற ஒரு கருத்தை எடுத்துரைக்கிறார்.

  அன்பும், சமாதானமும் இவ்வுலகில் நிலைத்திருக்க வேண்டுமானால், நாமும், அன்பை வளர்ப்பவர்களாகவும், சமாதானத்தில் வாழ்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே, நற்செய்தி வாசகங்களில் இருந்து நம்மால் உணர முடிகிறது.
  Next Story
  ×