என் மலர்

  ஆன்மிகம்

  இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்ட நிக்கதேம் (நிக்கோதேமு)
  X

  இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்ட நிக்கதேம் (நிக்கோதேமு)

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயேசுவின் போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களும் உண்டு.அவர்களில் ஒருவரான பரிசேயரான நிக்கதேம் இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தார்.
  இயேசு வாழ்ந்த காலத்தில் பரிசேயர்கள் எனப்படும் குழுவினர் அவரை வெகுவாக எதிர்த்தனர். அவர்கள் சட்டங்களை மட்டுமே பிரதானமாகப் பார்த்தவர்கள். அவர்களுக்கு இயேசுவின் சட்டங்களைத் தாண்டிய அன்பின் போதனை பிடிப்பதில்லை. ஆனால் அவர்களில் இயேசுவின் போதனைகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களும் உண்டு.

  அவர்களில் ஒருவர் நிக்கதேம். பரிசேயரான அவர் இயேசுவின் போதனைகளினால் ஈர்க்கப்பட்டிருந்தார். ஒரு நாள் இரவில் அவர் இயேசுவைத் தேடி வந்தார்.

  ‘‘ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாம் அறிவோம். கடவுளின் அருளின்றி இப்படிப்பட்ட செயல்களை யாரும் செய்ய முடியாது’’ என்றார்.

  இயேசு அவருடைய புகழுரையில் மயங்கவில்லை. நேரடியாக நற்செய்தியை அவருக்கு வழங்கினார்.

  ‘‘இறையாட்சியைக் காண வேண்டுமானால், ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டும்’’.

  அந்த செய்தி நிக்கதேமுக்குப் புதுமையாய் இருந்தது. ‘‘மறுபடியும் பிறப்பதா? பிறந்தபின் எப்படி ஒருவன் மீண்டும் தாயின் வயிற்றுக்குள் போக முடியும்?’’ என்று நிக்கதேம் கேட்டார்.

  ‘‘மறுபடி பிறப்பது தாயின் வயிற்றிலிருந்து அல்ல. தண்ணீராலும், தூய ஆவியாலும் பிறக்க வேண்டும்’’ –இயேசு சொன்னார்.

  நிக்கதேம் குழம்பினார். இயேசு தொடர்ந்தார், ‘‘மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்’’ என்றார்.

  நிக்கதேம் இயேசுவின் போதனையை உற்றுக் கவனிக்க, அவர் தனது வருகையின் மையக்கருத்தைச் சொன்னார்.

  ‘‘தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்’’ என்று மீட்பின் செய்தியைச் சொன்னார் இயேசு.

  நிக்கதேம் குறித்த செய்திகளை யோவான் நற்செய்தியாளர் மட்டுமே தருகிறார். எனவே இந்த நிகழ்ச்சி யோவானின் வீட்டில் நடந்திருக்கலாம் என்பது விவிலிய அறிஞர்களின் கருத்து.

  இயேசுவைச் சந்திக்கும் முன் நிக்கதேம் அவரை ஒரு இறைவாக்கினர் என்றே கருதியிருந்தார். ஆனால் இயேசு வுடனான உரையாடல் அவருக்கு இயேசுவை மீட்பராக அடையாளம் காட்டியது.

  நாடெங்குமிருந்து தேர்வு செய்யப்பட்ட 70 பேரைக் கொண்ட ‘சனதரீம்’ எனும் அமைப்பின் உறுப்பினர் நிக்கதேம்.  இயேசுவை கைது செய்ய வேண்டும் என பரிசேயர் கூட்டம் கர்ஜித்தபோது ‘ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?’ என தைரியமாக அவர்களிடம் எதிர்த்துப் பேசினார் நிக்கதேம். இயேசுவின் மரணத்தின் பிறகு அடக்க நிகழ்விலும் வெளிப்படையாகவே அதில் பங்குகொண்டார்.

  நிக்கதேம் துணிச்சல் மிக்கவர் என்பதையும், இயேசுவின் போதனைகளை உண்மையாகவே நேசித்தார் என்பதையும் இயேசு அறிந்திருந்தார். அதனால் தான் மற்ற பரிசேயர்களின் கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் இயேசு, நிக்கதேமின் சந்திப்பின் போது மிக முக்கியமான ‘‘மறு பிறப்பு’’ பற்றிய மறை உண்மைகளை விளக்கு கிறார்.

  நிக்கதேம் இயேசுவுக்கு ஆதரவாய் இருந்ததால் அவர் பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளானார். மிகப்பெரிய செல்வந்தராய் இருந்த அவருடைய பொருட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டன. வறுமை உந்தித் தள்ள, அவரது மகள் குதிரைக்கு வைக்கும் உணவுகளில் சிந்தியவற்றை பொறுக்கி உண்டு வாழ்ந்து வந்தார். நிக்கதேம், பேதுரு யோவான் ஆகியோரிடம் திருமுழுக்கு பெற்று சாட்சியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து, எளிமையாக மரித்தார் போன்ற செய்திகளெல்லாம் ‘‘நிக்கதேம் நற்செய்தி’’ எனும் விவிலியத்தில் இடம் பெறாத தள்ளுபடி நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நிக்கதேமின் வாழ்க்கை பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. அவற்றுள் முக்கியமானவை...


  1. அறியாமை இருளில் இருப்பவர்கள் ஆர்வத்தோடும், துணிச்சலோடும் இயேசுவிடம் வரும் போது வெளிச்சத்தின் விளக்கங்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

  2. உலகமே எதிர்த்து நின்றாலும், தனிநபராக இயேசு விடம் வருபவர்களை இயேசு அன்புடன் வரவேற்கிறார். அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்க்கை ரகசியங்களை விளக்குகிறார்.

  3. புறத்தூய்மை நீரால் அமையும், அகத் தூய்மை திரு முழுக்கினால் நிறைவேறும் என்பதே இயேசு சொல்லும் இரட்டை தூய்மையாதல்.

  4. இயேசுவின் போதனைகளை உலக அனுபவங்களைக் கொண்டு புரிய முயல்வது அறிவீனம்.

  5. தன்னை நம்பும் எவரும் அழியாமல் காப்பதற்காகவே இயேசு சிலுவையில் உயிர் விட்டார்.

  6. நிக்கதேம் மிகுந்த செல்வந்தராய் இருந்தார். அவருடைய சுயநல சிந்தனைகளை இயேசு விடுவித்திருந்தார்.

  7. சமய ஞானம் அதிகம் கொண்டவராய் இருந்த நிக்கதேம் தன்னைத் தாழ்த்திக் கொண்டு இயேசுவிடம் போதனை பெற வந்தார்.

  8. நிக்கதேமின் கேள்விகள் விமர்சன நோக்கில் இல்லாமல், ஆன்மிக வளர்ச்சிக்காகவே கேட்கப்பட்டன.

  9. உண்மையான போதனையைக் கேட்டதும், தனது பழைய மரபுகளை விட்டு விட நிக்கதேம் தயங்கவில்லை.

  10. அச்சம், தயக்கம், சூழ்நிலை அழுத்தம் என பல இடர் களுக்கு மத்தியிலும் இதயத்தில் கொழுந்துவிட்டெரியும் ஆன்மிக தாகம் கொண்டிருந்தார்.
  Next Story
  ×