என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தவக்கால சிந்தனை: கவர்ச்சிக்கு பலியாகிறோமா?
    X

    தவக்கால சிந்தனை: கவர்ச்சிக்கு பலியாகிறோமா?

    ஏசு பாடுகள் பட்டபோது அவரிடம் கவர்ச்சிகரமான தோற்றம் இல்லை. இதற்காக அவர் துன்பங்களையும், பாடுகளையும் சிலுவையையும் அவர் துறக்கவில்லை.
    மின்னுவதெல்லாம் பொன்னல்ல ஆனால், மின்னுவதைப் பொன் என்றே நினைத்து ஏமாந்து போகிறோம். பசுத்தோல் போர்த்திய புலி போல கவர்ச்சி என்பது உண்மையின் தோல் போர்த்தி நம்மை மயக்குகிறது. அதன் மடியில் நாம் பல நேரங்களில் விழுந்துவிடுகிறோம்.

    நாம் விரும்புபவை நம்மை கவர்கின்றன. நாம் விரும்புபவை அனைத்தும் நல்லது என்று கணித்துவிடமுடியாது. நமக்குத் தேவைப்படாதவை தேவைப்படுவது போலவும், தீயவை நல்லதுபோலவும் காட்சியளிக்கின்றன. இந்தக் காட்சிக்கு நாம் பலமுறை பலியாகிவிடுகிறோம்.

    அன்று ஆதாம் ஏவால் சாத்தானால் கவரப்பட்டனர். அவர்களுக்குத் தேவைப்பபடாத கனியைத்தின்றால் அவர்கள் கடவுளைப்போல வாழலாம் என்று அவர்களை நம்ப வைத்தது. சாத்தானின் கவர்ச்சிக்கு பலியாகி விட்டனர். வீட்டில் இருக்கும் குழந்தை ஐஸ் வேண்டும் என அடம்பிடிக்கிறது.



    ஒரு வகையில் ஐஸ் அதைக் காந்தம் போல கவர்கிறது. நாமும் அதற்கு ஐஸ் வாங்கிக்கொடுத்து அதை சர்க்கரைக் குழந்தையாக வளர்க்கிறோம். பல பொருட்கள் வாங்கும்போது அவைகள் நமக்கு தேவை இல்லை என்று தோன்றினாலும். அவைகள் நம்மைக் கவர்வதால் கடன்பட்டாவது வாங்கி கவர்ச்சிக்கு பலியாகி துன்புறுகிறோம்.

    ஏசு உருமாறியபோதுகூட தாபோர் மலையில் பேதுரு கவர்ச்சிக்கு உள்ளானார். ஏசுவின் உடைகள் மின்னியதையும், அவர் மூலம் பிரகாசித்ததையும் கண்டு அங்கேயே தாபோர் மலையிலேயே கூடாரம் அடித்து தங்கிவிடலாம் என ஏசுவுக்கு யோசனை கூறினார். (மத்: 17 :4) ஏசு பேதுருவின் கவர்ச்சி வசனங்களை நிராகரித்தார்.

    ஏசு கவர்ச்சியால் கவரப்பட்டவர் அல்ல சிலுவை ஒரு கவர்ச்சியான கருவி அல்ல அந்த சிலுவையை ஏசு கவர்ந்தார். சிலுவையில் நமக்கு மீட்பு அளித்தார். ஏசு பாடுகள் பட்டபோது அவரிடம் கவர்ச்சிகரமான தோற்றம் இல்லை. இதற்காக அவர் துன்பங்களையும், பாடுகளையும் சிலுவையையும் அவர் துறக்கவில்லை. நாமும் மேலோட்டமாக எண்ணி கவர்ச்சிக்கு இரையாகாமல் உண்மைக்கு சான்று பகிர்ந்து வாழ்வோம்.

    -அருட்தந்தை.சி.குழந்தை, காணியிருப்பு.
    Next Story
    ×