என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தினார்
    X

    இயேசு ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தினார்

    "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார் (மத்தேயு 9:12-13).
    அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது.

    அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" (மத்தேயு 11:19) என்று இழித்துரைத்தார்கள்.

    ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு.

    அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" (மத்தேயு 9:11) என்று கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார் (மத்தேயு 9:12-13).
    Next Story
    ×