என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்
    X

    நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்

    ‘உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே’ (விடுதலைப்பயணம் 22:29) என்கிறது விவிலியம்.
    ஒரு வீட்டு பணப்பெட்டியில் பல வித ரூபாய் நோட்டுகள் இருந்தன. ‘நாங்க தான் ஒசத்தி, நாங்க தான் நகைக்கடை, துணிக்கடை போன்ற இடங்களுக்குப் போவோம்’ என்றன அங்கிருந்த ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள்.

    ‘நாங்க ஒண்ணும் கொறஞ்சவங்க இல்லை. மளிகைக்கடைக்கெல்லாம் நாங்க தான் போவோம்’ என்றன நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் நோட்டுகள்.

    ‘உங்களை எல்லாம் விட நாங்க தான் உசத்தி, நாங்க தான் கோவில் உண்டியலுக்கு போவோம்’ என்றன அங்கிருந்த சில்லறை காசுகள்.

    ‘இறைவனுக்குக் கொடுத்தல்’ என்று சிந்திக்கும்போது நம்முடைய மனதில் பெரும்பாலும் பணம், பொருள் போன்ற விஷயங்கள் தான் வருகின்றன. உண்மையில் அதை விட முக்கியமாக நம்மையே நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்த அர்ப்பணத்தில் தான் கிறிஸ்தவ வாழ்க்கை அடங்கியிருக்கிறது.

    இறைவனுக்கு நாம் கொடுக்கும் எல்லாமே அவரிடமிருந்து பெற்றுக்கொண்டவை தான். கடவுள் இந்த பூமியைப் படைத்து அதை மனிதருக்குக் கொடுத்தார் என்கிறது விவிலியம். படைத்தவர் இறைவன் என்பதையும், படைத்து அவர் மனிதனுக்கு அளித்தார் என்பதையும் விவிலியம் நமக்கு தெளிவாக்குகிறது.

    ‘மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை; நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்’ (சங்கீதம் 24-1) என்கிறது பைபிள்.

    நிலத்துக்கு உரிமையாளர் இறைவன். அதே போல நிலத்தின் அறுவடைக்கும் அவரே உரிமையாளராக இருக்கிறார். ‘....தேவையான வேலையாட்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்’ (மத்தேயு 9:38) என்கிறது பைபிள்.

    விளைச்சலையும் அது சார்ந்த அனைத்தையும் கூட தனது ஆளுகைக்குள் வைத்திருக்கிறார் இறைவன். ‘தக்க காலத்தில் முன்மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்’ (எரேமியா 5:24) எனும் விவிலிய வார்த்தை அதை நமக்கு விளக்குகிறது.

    இறைவன் தனது விருப்பத்தின்படியும், தீர்மானத்தின்படியும் தான் நிலத்தின் விளைச்சலை நிர்ணயிக்கிறார். ‘நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே உங்களுக்கு மழையை நிறுத்திவிட்டேன்; ஓர் ஊரில் மழைபெய்யச் செய்து அடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன். ஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன். வேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று’ (ஆமோஸ் 4:7) என்கிறது விவிலியம்.

    இப்படி விளைச்சல் தரும் இறைவனுக்கு மனிதன் தருகின்ற பிரதிபலன் என்னவாக இருக்க வேண்டும்?

    ‘உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே’ (விடுதலைப்பயணம் 22:29) என்கிறது விவிலியம்.

    நான் உழைக்கிறேன், இது என்னோட நிலம், இதில் விளைகின்றவை என்னுடையவை என மனிதன் நினைக்க முடியாது. காரணம், நிலத்தின் உரிமையாளர் இறைவன். அறுவடைக்காரர் இறைவன். நிலத்தின் விளைச்சலை நிர்ணயிப்பவர் இறைவன். எனவே அதன் பலனை அவருக்கு செலுத்த வேண்டும், அதுவும் தாமதமின்றி செலுத்த வேண்டும்.

    இறைவனின் கருணை இல்லையேல் நிலம் விளைச்சலைத் தராது. ‘கோதுமையை விதைத்தார்கள்; ஆனால் முட்களையே அறுத்தார்கள். உழைத்துக் களைத்தார்கள்; ஆயினும் பயனே இல்லை. தங்கள் அறுவடையைக் கண்டு வெட்கம் அடைந்தார்கள். இதற்கு ஆண்டவரின் கோபக்கனலே காரணம்’ (எரேமியா 12:13) எனும் இறைவாக்கு இதை சொல்கிறது.

    அர்ப்பணிப்பு குறித்தும், காணிக்கைகள் குறித்தும் விவிலியம் பல விஷயங்களைப் பேசுகிறது. அவற்றில் மூன்று சிந்தனைகளைப் பார்ப்போம்.

    ஆபேலின் காணிக்கை: ‘...காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்’ (ஆதியாகமம் 4:3-4).

    விவிலியம் கூறுகின்ற முதல் காணிக்கை நிகழ்வு இது. இங்கே ஆபேலின் காணிக்கை முதல் தரமானதாக இருக்கிறது. கூடவே அவனுடைய காணிக்கை முழுமையானதாக இருக்கிறது.

    இறைவனுக்குக் காணிக்கை செலுத்தும் போது, தலையீறுகளையும், கொழுமையானவைகளையும் ஆபேல் தரம் பிரிக்கிறார். முழுமையானதை இறைவனுக்கு அளிக்க வேண்டும் எனும் ஆர்வம் இதில் வெளிப்படுகிறது. முழுமையின் கடவுளான இறைவன் ஆபேலையும், அவனுடைய காணிக்கையையும் ஏற்றுக் கொள்கிறார்.

    மக்கதோனியரின் காணிக்கை: ‘நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்’ (2 கொரி 8: 5). தங்களை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்ற மக்களினமாக மக்கதோனிய மக்களை பைபிள் சித்தரிக்கிறது.

    வழங்குவதில் முன்னோடியாக இருந்த மக்கதோனிய (மாசிதோனிய) திருச்சபை வறுமையின் பிடியில் இருந்தது. அந்த சூழலிலும் அவர்கள் இறைவனுக்கு தாராளமாய் வழங்கினார்கள். கூடவே, தங்கள் வாழ்வையும் இறைவனுக்கு அர்ப்பணித்தார்கள்.

    எத்தனை பொருள் கொடுத்தாலும் இறைவனின் அன்புக்கு ஈடு செய்ய முடியாது. நம்முடைய முழுமையான வாழ்வையும் அவருக்கு அர்ப்பணிக்க நாம் அழைக்கப்படுகிறோம்.

    ஏழை விதவையின் காணிக்கை: ஆலயத்தில் எல்லோரும் கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளி காணிக்கை செலுத்தி கர்வத்துடன் கடந்து போனார்கள். ஒரு ஏழை விதவை இரண்டு காசுகளை மட்டும் பணிவுடன் போட்டு விட்டு நகர்ந்தார். அவளிடம் இருந்தது அந்த இரண்டு காசுகள் மட்டுமே.

    இயேசு சொன்னார், ‘எல்லோரையும் விட அதிகமாய்ப் போட்டது இந்த ஏழைப் பெண்ணே’.

    அவர் தன்னிடம் இருந்ததில் முதன்மையானதை மட்டுமல்ல, தன்னிடம் இருந்த முழுவதையுமே படைத்து விட்டார். ‘எல்லாம் இழந்தாலும் இறைவன் தன்னை காப்பாற்றுவார்’ எனும் இறை நம்பிக்கையின் வெளிப்பாடு இது. எல்லாவற்றையும் ஆலயத்தில் அர்ப்பணித்து விட்டதால் இனி திருச்சபை அவரைக் கவனித்துக் கொள்ளவேண்டும் எனும் கடமையையும் அது சுட்டிக் காட்டுகிறது.

    இனியும் தாமதம் வேண்டாம். நம்மையே இறைவனிடம் அர்ப்பணிப்போம், இறைவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம், வேளச்சேரி, சென்னை.
    Next Story
    ×