என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறைவனுக்காக உண்மையாக உழைக்க வேண்டும்
    X

    இறைவனுக்காக உண்மையாக உழைக்க வேண்டும்

    இறைவனின் அழைப்பை ஏற்று அவரிடம் வரவேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைபணி செய்ய வேண்டும்.
    திராட்சைத் தோட்ட உரிமையாளன் ஒருவன் இருந்தான். அவனுடைய தோட்டத்தில் வேலைசெய்ய வேலைக்காரர்கள் தேவைப்பட்டார்கள்.

    ஒருநாள் அதிகாலையிலேயே எழுந்து அவன் வெளியே சென்றான். பல ஆட்கள் வேலைக்குத் தயாராய் நின்றிருந்தார்கள்.

    ‘என்னுடைய திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய உங்களுக்குச் சம்மதமா?’

    ‘கண்டிப்பாக ஐயா. யாராவது வேலைக்கு அழைப்பார்களா என்னும் எதிர்பார்ப்பில் தான் நாங்கள் இங்கே நின்று கொண்டிருக்கிறோம்...’

    ‘சரி. உங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி. என்னுடைய தோட்டத்தில் சென்று வேலை செய்யுங்கள்’.

    உரிமையாளன் சொல்ல அவர்கள் தங்களுக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் திராட்சைத் தோட்டத்துக்கு விரைந்தார்கள். போன உடனேயே வேலையை ஆரம்பித்தார்கள்.

    காலை ஒன்பது மணியளவில் தோட்ட உரிமையாளன் சந்தையை நோக்கிச் சென்றபோது அங்கே வேறு சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.

    ‘என்னப்பா? வேலை தேடி நிற்கிறீர்களா?’ அவன் கேட்டான்.

    ‘ஆம் ஐயா...’

    ‘சரி.. நீங்களும் என்னுடைய திராட்சைத் தோட்டத்துக்குச் சென்று வேலை செய்யுங்கள். உங்களுக்கு நியாயமான கூலியை நான் தருவேன்’ அவன் சொல்ல அவர்கள் அவனுடைய தோட்டம் இருக்கும் இடத்தை விசாரித்துத் தெரிந்து கொண்டு வேலைக்குச் சென்றார்கள்.

    சந்தைக்குச் சென்று விட்டு தலைவன் மதியம் பன்னிரண்டு மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மீண்டும் சிலர் வேலை தேடி வழியில் நின்று கொண்டிருந்தார்கள். அவர் களையும் தலைவன் தன்னுடைய திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினான்.

    பிற்பகல் மூன்று மணிக்கு வெளியே வந்த தலைவன் அப்போதும் அங்கே சிலர் வேலையில்லாமல் நிற்பதைக் கண்டு அவர்களையும் வேலைக்கு அமர்த்தினான்.

    மாலை ஐந்து மணிக்கு தெருவில் சென்றபோது அப்போதும் சிலர் அங்கே வேலையில்லாமல் நிற்பதைக் கண்ட அவன் ஆச்சரியமடைந்தான்.

    ‘என்ன? நாள் முழுவதும் இப்படி வேலை செய்யாமல் பொழுதைக் கழிக்கிறீர்களே! தப்பென்று தெரியவில்லையா?’.

    ‘ஐயா... எங்களை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை. நாங்கள் காலையிலிருந்தே காத்திருக்கிறோம்’ அவர்கள் சொன்னார்கள்.

    ‘சரி.. சரி.. நீங்களும் என்னுடைய திராட்சைத் தோட்டத்துக்குச் செல்லுங்கள். மாலையாகி விட்டது. பரவாயில்லை. கொஞ்ச நேரமாவது வேலை செய்யுங்கள்’ என்று அவர் களையும் அவன் தோட்டத்துக்கு அனுப்பினான்.

    வேலை நேரம் முடிந்து விட்டது.

    வேலையாட்களுக்குக் கூலி கொடுக்கும் நேரம்.

    தலைவன் மேற்பார்வையாளனை அழைத்து, ‘வேலை செய்பவர்களுக்கெல்லாம் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர் வரை அனைவருக்கும் கூலி கொடும்’ என்றான்.

    மாலை ஐந்து மணியளவில் வந்தவர்கள் முதலில் அழைக்கப்பட்டார்கள்.

    ‘இதோ... ஒரு தெனாரியம். உனக்கான கூலி!’ அவன் கொடுக்க வேலையாட்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவர்கள் ஒரு மணிநேர உழைப்புக்கு ஒரு தெனாரியம் கிடைக்கும் என்று நினைத்திருக்கவில்லை. பொதுவாக ஒரு நாள் முழுவதும் வேலைசெய்பவர்களுக்கான கூலி அது.

    முதலில் வந்தவர்கள் இதைப் பார்த்ததும் கணக்குப் போடத் தொடங்கினார்கள். ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கு ஒரு தெனாரியம் என்றால், சுமார் பன்னிரண்டு மணி நேரம் உழைத்த நமக்கு பன்னிரண்டு தெனாரியம் கூலி கிடைக்கும் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

    அவர்களுடைய முறை வந்தது. அவர்களுக்கும் கூலி தரப்பட்டது! ஒரு தெனாரியம்!

    அவர்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.

    ‘ஐயா... இது என்ன நியாயம்? ஒரு மணி நேரம் உழைத்தவனுக்கும், பகல் முழுவதும் வெயிலில் கிடந்து உழன்ற எங்களுக்கும் ஒரே கூலியா? அவங்களும், நாங்களும் ஒண்ணா? அநியாயமாய் இருக்கிறதே’ அவர்கள் தலைவனிடம் முறையிட்டார்கள்.

    அவன் அவர்களில் ஒருவரை அழைத்தான்.

    ‘நண்பனே... நீ எப்போது வேலைக்கு வந்தாய்?’

    ‘விடியற்காலையில்...’

    ‘உனக்கு என்ன கூலி தருவதாகச் சொன்னேன்?’

    ‘ஒரு தெனாரியம்’

    ‘சொன்ன கூலி தரப்பட்டிருக்கிறதா?’

    ‘தரப்பட்டிருக்கிறது, ஆனால்...’

    ‘உனக்குரிய கூலி உனக்குத் தரப்பட்டிருக்கிறது. அதை வாங்கிக் கொண்டு போ. உன்னைப் போலவே கடைசியில் வந்தவனுக்கும் கூலி கொடுப்பது என் விருப்பம். நான் நல்லவனாய் இருப்பதனால் உனக்குப் பொறாமையா?’ தலைவன் கேட்க வேலையாட்கள் அமைதியானார்கள்.

    விண்ணரசின் நிலை இதுவே. நீங்கள் கடைசியாய் வருகிறீர்கள் என்பதற்காக உங்களுடைய விண்ணக வாழ்வு மறுக்கப்படுவதில்லை. முதலில் வந்தீர்கள் என்பதற்காக அதிக சலுகைகளும் அளிக்கப்படுவதில்லை.

    இறைவனின் அழைப்பை ஏற்று அவரிடம் வரவேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைபணி செய்ய வேண்டும்.

    அடுத்தவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களுக்காக பொறாமை படக்கூடாது. கிடைக்கும் நேரத்தில் உண்மையாக இறைவனுக்காக உழைக்க வேண்டும். இத்தகைய பாடங்களை நாம் கற்றுக் கொள்வோம்.

    Next Story
    ×