என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்
    X

    நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்

    நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கத்தை கீ பார்க்கலாம்.
    விவிலியம் தரும் ஆதாரம்

    இயேசு கிறித்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் மத்திய ஆசியாவில் பாலசுதீன நாட்டில் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று வழிபட்டார்கள் என்றும் நாம் அறிகின்ற செய்தி விவிலியத்தில் உள்ளது.

    இயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்கு வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.

    இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. நான்கு நற்செய்தி நூல்களின் ஆசிரியர் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பது மரபு.

    தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறித்துவுக்கு முன், கிறித்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.

    இன்றும்கூட, கிறித்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி நாம் அறிகின்ற தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.

    மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்தேயு 2:1). வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டார் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (காண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.

    லூக்கா நற்செய்திப்படி, "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார் (காண்க: லூக்கா 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.

    மத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து.

    இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அவை தரும் செய்திகளின் சுருக்கம் இதோ:

    இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
    மரியா என்னும் கன்னிப் பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).

    சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
    முப்பது வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.

    பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.

    ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.

    இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத் தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.

    இயேசு கடைசி இரவு உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).

    பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
    யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.

    இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.

    கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.

    இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.

    இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).
    Next Story
    ×