என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒவ்வொரு ஆத்துமாவும் விலையேறப் பெற்றது
    X

    ஒவ்வொரு ஆத்துமாவும் விலையேறப் பெற்றது

    ஏசுவை விசுவாசிப்போம், நித்திய ஜீவனான மோட்சத்தை பெற்றுக்கொள்வோம்.
    பிரான்சு நாட்டு சர்வாதிகாரி நெப்போலியன் போனபாட்டைக் குறித்து அறியாதவர் யாரும் இருக்க முடியாது. முழு உலகத்தையும் வென்று ஆளுகை செய்ய வேண்டும் என்பது அவனது பேராசை. பெரும்படை திரட்டி பல நாடுகளை ஜெயித்தான். ஆனால் எகிப்து மீது படையெடுத்தபோது நைல் நதி யுத்தத்தில் எதிர்பாராதவிதமாக இங்கிலாந்து கடற்படை தளபதி நெல்சன் பிரபுவிடம் தோற்றுப்போனான்.

    நெல்சன் பிரபு மனிதாபிமானம் மிக்கவர். ஒருமுறை சிறிய கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார். இதை எப்படியோ அறிந்துகொண்ட பிரான்சு கடற்படையைச் சேர்ந்த பிரமாண்டமான யுத்த கப்பல்கள் புயல் வேகத்தில் நெல்சனின் சிறிய கப்பலை விரட்டின.

    எப்படியாவது தொலைவில் உள்ள இங்கிலாந்து கடற்படை தளத்தை அடைந்துவிட்டால் தப்பிவிடலாம் என்று நினைத்த நெல்சன், கப்பலை மிகவேகமாக ஓட்டச் சொன்னார். ஆனால் பிரான்சு கப்பல்கள் நெருங்கி வந்துவிட்டன.

    நெல்சன் கப்பலுக்கு மற்றொரு சோதனை வந்தது. அவரது கடற்படை வீரன் ஒருவன் கடலில் தவறி விழுந்துவிட்டதாக அவனுக்கு அறிவித்தார்கள். அவனது பெயரைக் கேட்ட நெல்சன், ‘அவன் ஒரு சிறந்த வீரன், அவனை நாம் இழந்துவிடக் கூடாது, கப்பலைத் திருப்புங்கள்’ என்றார். கப்பல் திருப்பப்பட்டது. அந்த வீரன் காப்பாற்றப்பட்டான்.

    ஆனால் என்ன ஆச்சரியம், பிரான்சு நாட்டு கப்பல்கள் திரும்பி ஓட்டம் பிடித்தன. நெல்சன் தனது கடற்படையை பார்த்துவிட்டதால் தைரியமாக கப்பலைத் திருப்பி நம்மை எதிர்க்கிறார் என்று நினைத்து எதிரிக் கப்பல்கள் ஓட்டம் பிடித்தன. நெல்சனின் மனிதாபிமானம் அவரையும் கப்பலையும் வீரர்களையும் காப்பாற்றியது.

    ஒவ்வொரு உயிரும் விலையேறப்பெற்றது. அதுபோல தேவனுக்கு முன்பாக ஒவ்வொருவரின் ஆத் மாவும் அப்படியே உள்ளது. இதை சில உவமைகள் மூலம் ஏசு விளக்கியுள்ளார். ஒரு மனிதனுக்கு 100 ஆடுகள் இருந்து அதில் ஒன்று காணாமல் போய்விட்டது. ஒரு ஆடுதானே போனால் போகட்டும் என்று விட்டுவிடவில்லை. மீதி 99 ஆடுகளையும் காட்டில் விட்டுவிட்டு காணாமல் போன ஆட்டை தேடிக் கண்டுபிடித்தான். அதை மற்றவர்களிடம் கூறி மகிழ்ந்தான். அவனுக்கு ஒவ்வொரு ஆடும் விலையேற பெற்றதாகவே காணப்பட்டது.

    மத்.18;1113; லூக்கா 15;310 ஆகிய வசனங்களில் இந்த உவமை எழுதப்பட்டுள்ளது. இந்த உவமையைக் கூறிய ஏசு கடைசியாக, ‘மனந்திரும்ப அவசியமில்லாத 99 நீதிமான்களைக் குறித்து சந்தோஷம் உண்டாகிறதைப் பார்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்’ என்றார்.

    பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து ஏசு உலகத்தில் வந்தார் (1 தீமோ.1;15). உண்மைதான். பாவிகள் ரட்சிப்படைய வேண்டும் என்பதற்காகத்தான் தேவன் மனிதனானார். பாவிகளின் பாவங்களுக்காகத்தான் சிலுவையில் ரத்தம் சிந்தி மரித்தார். ஏசு கிறிஸ்துவின் ரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் (1 யோவான்1;7).

    இந்த கடைசி நாட்களில் வாழும் நாம் ஏசுவின் இரண்டாம் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் வருகை தாமதமாகிறது. இதுகுறித்து சிலர், ‘ஏசு வருவார் என்று சொன்ன வாக்குத்தத்தம் எங்கே?’ (2 பேதுரு 3;4) என்று கேள்வி கேட்பதையும் பார்க்கிறோம்.

    ஆனால் அதற்கான விடையும் அதே அதிகாரத்தில் உள்ளது. ‘ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே அவர் தாமதிக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது. ஏசுவைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆத்மாவும் அவருக்கு முக்கியம்.

    சரீர மரணம் பற்றி பயப்படாமல் ஆத்ம மரணம் அதாவது நரகத்துக்கு பயப்படுங்கள் (மத்.10;28). மனிதனை தேவன் மண்ணினால் உருவாக்கி ஜீவ சுவாசத்தை ஊதியதால் மனிதன் ஜீவாத்மா ஆனான் (ஆதி.2;7). அதே சமயம், பாவம் செய்யும் ஆத்மாவே சாகும் (எசே.18;49) என்று வேதம் கூறு கிறது.

    சரீர மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் நாம் இரண்டாம் மரணமாகிய அக்னியுள்ள நரகத்தில் விழுந்துவிடக் கூடாது (வெளி.21;8). பாவம் செய்பவனின் ஆத்மா நரகத்தில் தள்ளப்பட்டுவிடும். அது இரண்டாம் மரணம். என்னிடத்தில் விசுவாசமாக இருப்பவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்ற ஏசுவின் வாக்குத்தத்தம் நமக்கு உண்டு. எனவே ஏசுவை விசுவாசிப்போம், நித்திய ஜீவனான மோட்சத்தை பெற்றுக்கொள்வோம்.

    டேவிட் மோகன்ராஜ், அண்ணாநகர் மேற்கு, சென்னை-40.
    Next Story
    ×