என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாலந்து கொடுத்த செல்வந்தன்
    X

    தாலந்து கொடுத்த செல்வந்தன்

    நாமும் நமக்கு இறைவன் தந்திருக்கும் திறமைகளை அவருக்காகப் பயன்படுத்தி, அதை இறுதியில் அவரிடமே ஒப்படைக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்கு பெறுவோம்
    ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் வெளிநாடு செல்லும் முன் தன்னுடைய பணியாளர்கள் மூவரை அழைத்து அவர்களிடம் தன்னுடைய உடமைகளையெல்லாம் ஒப்படைத்து, பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.

    பின் அவர்களின் திறமைக்கு ஏற்ப ஒருவனுக்கு ஐந்து தாலந்துகளும், ஒருவனுக்கு இரண்டு தாலந்துகளும், மூன்றாமவனுக்கு ஒரு தாலந்துமாக அவர்களிடம் கொடுத்தான். ஒரு ‘தாலந்து’ என்பது சுமார் முப்பது கிலோ தங்கம் என வைத்துக் கொள்ளலாம்.

    ஐந்து தாலந்து பெற்றவன் மகிழ்ந்தான். தன்னுடைய திறமையின் மீது தலைவன் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்யாய்ப் போய்விடக் கூடாது என்று நினைத்து மிகவும் கடுமையாக உழைத்தான். அந்த ஐந்து தாலந்துகளையும் முதலீடாய்ப் போட்டு அவன் உழைத்ததில் மேலும் ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தான்.

    இரண்டு தாலந்து பெற்றவனும், தலைவர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்து விடக் கூடாதே என எண்ணி கடுமையாய் உழைத்தான். அவனுடைய உழைப்பினால் மேலும் இரண்டு தாலந்துகளைச் சம்பாதித்தான்.

    ஆனால் ஒரு தாலந்து பெற்றவனோ ஒன்றுமே செய்யவில்லை. தனக்குக் கிடைத்தத் தாலந்தை மண்ணிலே புதைத்து வைத்துவிட்டு இளைப்பாறினான். சோம்பித் திரிந்தான். தலைவன் வந்து கேட்கும்போது எடுத்துக் கொடுத்து விடலாம் என்பது அவனுடைய சிந்தனை.

    வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்ட தலைவன் வீடு திரும்பினான். தன்னுடைய ஊழியர்களை அழைத்துக் கணக்குக் கேட்டான்.

    ஐந்து தாலந்து பெற்றவன் தலைவனுக்கு முன்பாக வந்து நின்றான், ‘ஐயா.. நீர் என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு ஐந்து தாலந்துகளைக் கொடுத்தீர்கள். அதைக் கொண்டு மேலும் ஐந்து தாலந்துகளை நான் சம்பாதித்திருக்கிறேன். இந்த பத்து தாலந்துகளும் உமக்கே சொந்தமானவை. இதோ பத்து தாலந்துகள்’ என்றான்.

    தலைவன் மகிழ்ந்தான், ‘நன்று ஊழியனே. என்னுடைய நம்பிக்கையை நீ காப்பாற்றிவிட்டாய். சிறிய செயல்களில் நீ நம்பிக்கைக்குரியவனாய் இருந்ததால் உன்னைப் பெரிய பொறுப்புகளுக்குத் தலைவனாக்குவேன்’ என்று அந்த ஊழியனைப் பாராட்டினான். ஊழியன் மகிழ்ந்தான்.

    அப்போது இரண்டு தாலந்து பெற்றவன் தலைவனுக்கு முன்பாக வந்தான், ‘ஐயா... நீர் எனக்குத் தந்த இரண்டு தாலந்தை முதலீடு செய்து மேலும் இரண்டு தாலந்து களைச் சம்பாதித்துள்ளேன். இதோ நான்கு தாலந்துகள்’ என்றான்.

    ஆஹா... உன்னை நினைத்து நான் மிகவும் மகிழ்கிறேன். நீயும் என்னுடைய நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியன் என்பதை நிரூபித்துவிட்டாய். சிறிய பொறுப்பில் நீ சிரத்தையுடன் செயல்பட்டதால் பெரியவற்றுக்கு உன்னைப் பொறுப்பாளியாக்குவேன்’ என்று பாராட்டினான்.

    கடைசியாக ஒரு தாலந்து பெற்றவன் வந்தான்.

    ‘ஐயா... நீர் மிகவும் கடின மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும்... விதைக்காத இடத்திலும் போய் அறுவடை நடத்துவீர், தூவாத இடத்திலும் போய் சேகரிப்பீர்...’ பணியாளன் தன்னுடைய தலைவனைப் பற்றி குற்றம் சொல்ல ஆரம்பித்தான்.

    ‘உம்முடைய குணம் எனக்கு நன்றாகத் தெரியும். நான் எங்காவது முதலீடு செய்து நஷ்டமடைந்தால் என்ன செய்வது என்று பயம். அதனால் எதற்கு வீண் வம்பு என்று உம்முடைய பணத்தை மண்ணில் புதைத்து வைத்தேன். இதோ உமது பணம். நீர் தந்த பணம் அப்படியே இருக்கும் எதுவும் குறைவுபடாது’ அவன் பணத்தை நீட்டினான்.

    தலைவன் கோபமடைந்தான்.

    ‘கெட்ட ஊழியனே. சோம்பேறியே! நான் விதைக்காத இடத்திலும் அறுப்பேன், தூவாத இடத்திலும் சேர்ப்பேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா? அப்படியானால் ஏன் என்னுடைய பணத்தை மண்ணில் புதைத்து வைத்தாய்? அதற்குப் பதிலாக நீ வட்டிக் கடைக்காரரிடமாவது கொடுத்து வைத்திருக்கலாமே. எனக்கு வட்டியாவது கிடைத்திருக்குமே! உன்னால் எனக்கு என்ன பலன்?’ தலைவன் கோபத்தில் கத்தினான்.

    ‘இவனிடம் இருக்கும் தாலந்தைப் பிடுங்கி, பத்து தாலந்து உள்ளவனுக்குக் கொடுங்கள். அவன் இதைப் பயன்படுத்துவான். இந்த பயன்படாத ஊழியனை வெளியே உள்ள இருளில் தள்ளுங்கள். இவன் அழுகைக்கும் அங்கலாய்ப்புக்கும் சொந்தக்காரன்’ தலைவன் ஆணையிட்டான்.

    அவர்கள் அவனைப் பிடித்து வெளி இருளில் தள்ளினார்கள். அவனிடமிருந்த தாலந்து பறிக்கப்பட்டது. அது பத்து தாலந்து உள்ளவனுக்குக் கொடுக்கப்பட்டது.

    ‘உள்ளவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ என்பதே இந்த நிகழ்ச்சி சொல்லும் பாடம்.

    பயன்படுத்தும் ஆர்வமும், முயற்சியும் உள்ளவனுக்கு வாய்ப்புகளும், இறைவார்த்தையும் கொடுக்கப்படும். அவன் சோதனைகளையும், தடைகளையும் தாண்டி பணி செய்வான். அந்தத் தகுதி இல்லாதவர்களுக்கோ அழுகையே மிஞ்சும்.

    நாமும் நமக்கு இறைவன் தந்திருக்கும் திறமைகளை அவருக்காகப் பயன்படுத்தி, அதை இறுதியில் அவரிடமே ஒப்படைக்கும்போது அவரது மகிழ்ச்சியில் பங்கு பெறுவோம் என்பதே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். 
    Next Story
    ×