என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கர்த்தருடைய இறை வார்த்தைகள்
    X

    கர்த்தருடைய இறை வார்த்தைகள்

    திறக்கப்படாத வேதாகமங்களையல்ல, திசைகாட்டும் வேதா கமங்களை நம்முடைய வாழ்வில் பயன்படுத்துவோம், கர்த்தருடைய வார்த்தைகள் அருளும் ஆசீர்வாதங்களை பெற்று வாழ உங்களுக்கு இறைவன் அருள் புரிவாராக.
    ஒரு சிறுவன் பழைய பொருட்கள், உடைந்து போன மர சாமான்கள், தேவையற்ற பொருட்கள் ஆகியவற்றைச் சேமித்து வைத்திருந்த அறையில் இருந்து தன்னுடைய பழைய விளையாட்டுப் பொம்மையைத் தேடி எடுக்கச் சென்றான். அப்போது தூசு படிந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கண்டுபிடித்தான். அதைத் தன் தாயிடம் கொண்டு வந்து அதைப் பற்றி கேட்டான். தடுமாற்றமடைந்த அந்தத் தாய் ‘இது வேதாகமம், கடவுளுடைய புத்தகம்’ என்று பதற்றமாகப் பதிலளித்தாள்.

    யோசனையில் ஆழ்ந்த சிறுவன், ‘இது கடவுளுடைய புத்தகமென்றால், நாம் ஏன் அதை அவரிடமே திருப்பிக் கொடுத்து விடக் கூடாது?, இங்கே யாரும் இதைப் பயன்படுத்துவதில்லையே’ என்று கேட்டான்.

    பலருடைய வீடுகளில் பரிசுத்த வேதாகமங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. உண்மையில் அதைக் கவனிப்பதும் இல்லை, அதைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை. குடும்பத்தில் நோயோ, மரணமோ ஏற்படும் வேளையில் மட்டுமே அதை எடுத்துப் படிக்கிறார்கள்.

    நாம் வாழும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை வேதாகமம் நமக்கு அறிவிக்கிறது. உலகும் உலகில் உள்ள படைப்புகள் யாவும் கடவுளால், கடவுளுடைய வார்த்தையால் படைக்கப்பட்டன. இதிலிருந்து இறை வார்த்தைகளுக்கு எவ்வளவு மகத்தான ஆற்றல் உள்ளது என்பது விளங்குகிறது.

    ‘ஒளி தோன்றுக’ (தொடக்க நூல் 1:3) என்றார் கடவுள், வெளிச்சம் உண்டானது.

    கர்த்தருடைய வார்த்தைகளுக்கு பல பரிமாணங்கள் உண்டு. படைக்கிற, பாதுகாக்கிற, பராமரிக்கிற, பாவங்களை மன்னிக்கிற, புது வாழ்வளிக்கிற, திட நம்பிக்கை அளிக்கிற, சுகப்படுத்துகிற, மறுவாழ்வளிக்கின்ற இப்படி எத்தனையோ பணிகளை செய்யக் கூடிய ஆற்றல் நிறைந்தது.

    இந்த கடவுளுடைய வார்த்தைகளடங்கிய பரிசுத்த வேதாகமத்தை வாழ்க்கைக்குச் சொந்தமாக்காமல் எவ்வளவோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    இறை வார்த்தை நம்மில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஏராளம்.

    இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய போதகரான ‘சார்ல்ஸ் ஸ்பர்ஜன்’ லண்டன் நகரின் தெருமுனை ஒன்றில் சாலையைக் கடக்கத் தயங்கியவராக நின்று கொண்டிருந்தார். குதிரைகளும், வண்டிகளும் சாலை விதிகளைப் பற்றிக் கவலைப் படாமல் ஓட்டுநர்களின் விருப்பத்திற்கேற்ப வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க ஸ்பர்ஜன் அவர்களின் உதவியை நாடிய போது தான் அவர் அந்த சாலையைக் கடக்க துணிந்தார்.

    பயம் என்பது நம்மை செயலிழக்கச் செய்யக் கூடிய ஒரு வலிமையான உணர்வாகும். அது பெரியவர்களைக் கூட சிறுவர்களைப் போல அஞ்சி நடுங்க வைக்கும். இறை வார்த்தை பயத்தை விரட்டக் கூடியது. விசுவாசத்தை நம்மில் வளர்க்கக் கூடியது.

    ஒரு முறை இயேசு கடல் மீது நடந்து வருவதைக் கண்ட சீடர்கள் ‘பேய்’ என அஞ்சி நடுங்கினார்கள். ‘துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்’ (மத்தேயு 14:27) என்று கூறி இயேசு அவர்களின் பயத்தை விரட்டினார். ‘துணிவோடிருங்கள்’ எனும் இயேசுவின் வார்த்தை சீடர்களின் அற்ப விசுவாசத்தை மாற்றி பெரிய விசுவாசத்தைக் கொண்டு வந்தது.

    பார்வையற்ற அந்த நபருக்கு உதவி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஸ்பர்ஜன் அவர்கள் கடவுளுடைய வார்த்தையை மனதில் கொண்டதால் தயக்கத்தை விரட்டினார். தயக்கம், பயம் போன்ற சூழல்களில் மட்டுமல்ல சோதனைகள் நம்முடைய வாழ்க்கையை மேற்கொள்ளும் போது கூட கடவுளுடைய வார்த்தை நம்மை அந்த சோதனைகளிலிருந்து மீட்டெடுக்கிறது.

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்க்கையில் இறை வார்த்தைகளைக் கொண்டு சோதனைகளை வென்று நமக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்துள்ளார்.

    நாற்பது நாட்கள் சாப்பிடாமல் இருந்த இயேசுவுக்குப் பசி எடுத்தது. சாத்தான் அவரை சோதிக்கிறான்.

    ‘நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்’ என்றான்.

    இயேசுவோ இறை வார்த்தையை கையாளுகிறார். ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயு 4:2-4)

    அலகை, இயேசுவை தேவாலயத்து உச்சியின் மேல் நிறுத்தி, ‘நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாத படி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று எழுதியிருக்கிறதே என்று கடவுளின் வார்த்தைகளைக் கொண்டே சோதித்தான்.

    இயேசு அவனிடம், ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே’ என பதிலளித்தார். (மத்தேயு 4:5-7)

    பிசாசு, ஆண்டவரை உயர்ந்த மலையின் மேல் கொன்டு போய் உலகத்தின் ராஜ்யங்களையும், மகிமையையும் காண்பித்து ‘நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என சொன்னான்.

    இயேசு அவனுக்கு மறுமொழியாக, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்று எழுதியிருக்கிறதே” என்றார். (மத் 4:8-10)

    மேற்கண்ட மூன்று சோதனைகளையும் இறை வார்த்தைகளைக்கொன்டே இயேசு வெற்றி கொண்டார். ஆண்டவர் இயேசு தன்னுடைய திருப்பணி வாழ்க்கையைத் தொடங்கும்போது ஏற்பட்ட சோதனைகளை மேற்கொள்ள கர்த்தருடைய வார்த்தைகள் அவருக்கு உதவியது.

    அன்பார்ந்தவர்களே, இறை வார்த்தை நம்முடைய வார்த்தைகளால் அளவிட முடியாத ஆற்றலுடையது. அவை நம்முடைய தயக்கங்களை, பயங்களை, சோதனைகளை, மேற்கொள்ள உதவி செய்கிறது.

    திறக்கப்படாத வேதாகமங்களையல்ல, திசைகாட்டும் வேதா கமங்களை நம்முடைய வாழ்வில் பயன்படுத்துவோம், கர்த்தருடைய வார்த்தைகள் அருளும் ஆசீர்வாதங்களை பெற்று வாழ உங்களுக்கு இறைவன் அருள் புரிவாராக.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்லாயர் ஆலயம், சென்னை.
    Next Story
    ×