என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அற்புதங்களைக் காண தயாராகுங்கள்
    X

    அற்புதங்களைக் காண தயாராகுங்கள்

    கர்த்தருடைய அந்த வசனத்திற்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுங்கள். உங்களை ஆசீர்வதிக்க விரும்பும் கர்த்தர் நிச்சயமாய் அற்புதங்களைச் செய்வார்.
    அற்புதங்களை அனுபவிப்பதற்கான சில முக்கிய ஆலோசனைகளை ஜெபத்தோடு எழுதுகிறேன். கர்த்தருடைய அந்த வசனத்திற்கு மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுங்கள். உங்களை ஆசீர்வதிக்க விரும்பும் கர்த்தர் நிச்சயமாய் அற்புதங்களைச் செய்வார்.

    ஏகசிந்தை

    ‘ஒருவரோடொருவர் ஏக சிந்தையுள்ளவர்களாயிருங்கள்் மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள். உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்’. (ரோமர் 12:16)

    உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் ஏக சிந்தை மிக முக்கியமானது. அற்புதங்களுக்கு ஏகசிந்தை மிகவும் அவசியமான ஒன்று.

    ஒரே வீட்டில் உள்ளவர்களின் சிந்தனை வேறுபட்டிருக்கும் என்றால், அங்கு ஆசீர்வாதங்கள் அவ்வளவு பெரிதாக இருக்காது. கணவன்- மனைவி, பிள்ளைகள் என அனைவரும் ஒரு காரியத்தைக் குறித்து இணைந்து சிந்தித்து செயல்பட்டால், நிச்சயம் ஆண்டவரும் அங்கு கிரியை செய்வார்.

    நம்முடைய குடும்பத்தின் நிலைமையை சாத்தான் அறிந்து, பலவிதமான எதிர்மறையான எண்ணங்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவருக்குள் ஏவி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சி செய்வான். எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதை உள்ளவர்களாக இருந்து ஆண்டவரை சார்ந்து கொள்வது முக்கியமானதாகும்.

    ‘ஏகசிந்தை என்ற உன்னதமான குணத்திற்காக ஜெபம் பண்ணுங்கள். நிச்சயம் இக்கிருபையை கர்த்தர் உங்களுக்குத் தருவார். அற்புதங்களைக் காண்பீர்கள்’ என்று 2.கொரி.13:11 கூறுகிறது.

    ஒருமனப்பாடு

    ‘யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும், பிரபுக்களும் கட்டளையிட்ட பிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று’. (2.நாளா.30:12)

    அற்புதங்களை நாம் தேடுவதற்கு ஒருமனப்பாடு மிகமிக முக்கியம். ஏனெனில் தன்னிச்சையாக செயல்படுகிற அநேக தேவனுடைய பிள்ளைகள் ஒருமனப்பாடு என்ற நல்ல காரியத்தைக் குறித்து யோசிப்பதேஇல்லை.

    இயேசு இப்படி சொல்கிறார், ‘அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’. (மத். 18:19)

    குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் விசுவாசமும் ஜெபமும் இருந்து, மற்றவர்களுக்குள் விசுவாச ஜெபம் குறைவாக இருக்குமென்றால் அவர்களைத் தள்ளிவிடக்கூடாது. அவர்களையும் ஒருமனப்பாட்டிற்குள் கொண்டு வர நாம் செயல்பட வேண்டும். இது நம்முடைய சுயபெலத்தினால் ஒருக்காலும் முடியாது. ஒருமனப்பாட்டிற்காக கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அப்போது தேவனுடைய கரம் ஒருமனப்படுத்தும்.

    உங்கள் குடும்பத்தின் ஒருமனப்பாட்டிற்காக நீங்கள் தான் ஜெபிக்க முடியும். ஆண்டவர் ஒருமுகப்படுத்தும் வரைக்கும் ஜெபியுங்கள். நிச்சயம் கர்த்தர் ஒருமனப்பாட்டை கட்டளையிட்டு நீங்கள் எதிர்பார்க்கும் அற்புதங்களைக் காண கிருபை செய்வார்.

    ‘அவர்கள் ஜெபம் பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது’. (அப்.4:31)

    ஏற்றுக்கொள்ளுங்கள்

    ‘ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்’. (ரோமர்-15:7)

    நீங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கலாம். இரட்சிப்பின் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். ஜெபிக்கிறவர்களாக இருக்கலாம். ஆனாலும் ஏன் ஆண்டவர் எனக்கு அற்புதம் செய்யவில்லை? என்பது தானே உங்களுடைய இருதயத்தின் பாரம்.

    நீங்கள் இரட்சிக்கப்பட்டு மனம் திரும்பியது, இயேசுவை விசுவாசிப்பது எல்லாமே உண்மைதான். ஆனால் அற்புதத்திற்கு தடையாயிருக்கிற காரியங்களை நீங்கள் சீர்படுத்த வேண்டும்.

    முதலாவது உங்களுக்குரியவர்களை (கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்) பெயரளவில் அல்ல மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை நடத்துகிறவர்களையும் (தலைவர்கள். அதிகாரிகள்) அங்கீகரித்து அவர்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

    மேலும், எபே.4:2 சொல்லுகிறபடி, ‘அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு தேவையான சகல வசதிகளை செய்து கொடுத்தும் அவர்களிடத்தில் நீங்கள் அன்பில்லாதவர்களாய் நடந்தால், அதை ஆண்டவர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள். அது அநேக அற்புதங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வரும்’.

    எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்’ என்ற (கலா.6:2) வசனத்தின்படி இயேசு ராஜாவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். தடைப்பட்ட அற்புதங்கள் உங்களைத் தேடிவரும் என்பது நிச்சயமாகும். ஆகவே மேற்கண்ட ஆலோசனைகளுக்கு மனப்பூர்வமாய் அர்ப்பணியுங்கள், அற்புதங்களைக் காண்பீர்கள்.

    சகோ.ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.
    Next Story
    ×