என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிறரை குற்றம் சாட்டாமல் நேசிக்கவேண்டும் என்பதை உணர்த்திய இயேசு
    X

    பிறரை குற்றம் சாட்டாமல் நேசிக்கவேண்டும் என்பதை உணர்த்திய இயேசு

    சட்டங்களுக்கு மேலானது அன்பு என்பதையும், பிறரை குற்றம் சாட்டாமல் நேசிக்கவேண்டும் என்பதையும், மன்னிப்பு பெற்றபின் பாவம் செய்யாத உறுதி வேண்டும் என்பதையும் இயேசு உணர்த்தியதை பார்க்கலாம்.
    இயேசு ஆலய வாசலில் அமர்ந்து மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். திடீரென ஒரு பெரும் சலசலப்பு. பலர் சேர்ந்து ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் தள்ளினார்கள். ஆடைகள் அலங்கோலமாய், தலைமுடி ஒழுங்கில்லாமல் அலைய அவள் உதடுகளில் வழியும் ரத்தத்தோடு இயேசுவின் முன்னால் வந்து விழுந்தாள்.

    ‘போதகரே... இந்தப் பெண் விபசாரத்தில் பிடிபட்ட பெண்...’ ஒருவர் ஆரம்பித்து வைத்தார்.

    ‘இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்லவேண்டும்...’ இன்னொருவர் அதைத் தொடர்ந்தார்.

    ‘இதை நாங்களாகச் சொல்லவில்லை. நீங்கள் மதிக்கும் மறைநூல் தான் சொல்கிறது. அதுவும் மோசே தான் சொல்லியிருக்கிறார். என்ன சொல்கிறீர்?’ சிலர் அதை முடித்து வைத்தார்கள்.

    இயேசுவை நோக்கி ஒரு முக்கியமான கண்ணியை விரித்து வைத்த திருப்தி அவர்களுக்கு. இயேசு ஓய்வு நாளில் கூட குணமாக்குபவர், எனவே இந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல் இருக்க அவரால் முடியாது.

    ஆனால் அவர் அப்படிக் காப்பாற்றினால் சட்டத்தை மீறுகிறார் என்பது இந்த ஆலய முற்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு விடும். ரோமர்களுக்கு மட்டுமே அப்போது ஒருவரை கல்லால் எறிந்து கொல்லும் உரிமை இருந்தது. இயேசு பெண்ணைக் கொல்ல அனுமதியளித்தால் அவரது கருணை பிம்பமும் உடையும், ரோமருக்கு எதிரான குற்றமும் சேரும். எந்த பக்கம் போனாலும் தோல்வி இயேசுவுக்கே. வந்தவர்கள் ஆவலுடன் இயேசுவின் பதிலுக்காக காத்திருந்தார்கள்.

    இயேசு பதில் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவருக்கு கூடியிருந்த மக்களின் சிந்தனை தெரிந்திருந்தது. ஏன் அந்தப் பெண்ணை அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரிந்திருந்தது.

    ‘நாங்கள் உம் முன்னிலையிலேயே இவளைக் கல்லால் எறிந்து கொல்லப் போகிறோம். இவள் பாவம் செய்தவள்...’ இயேசு எழுதுவதைத் தொடர்ந்து கொண்டிருக்க, அவர்கள் கத்தினார்கள்.

    இயேசு நிமிர்ந்து பார்த்தார். எல்லாருடைய கண்களிலும் கொலைவெறி. கைகளில் கற்கள். விபசாரத் தவறுக்காக ஒரு பெண்ணை கொண்டுவந்திருந்தார்களே தவிர, அந்த பாவத்தைப் பகிர்ந்து கொண்ட அல்லது அதற்கு ஏதுவான ஆளைக் காணோம்.

    இயேசு மவுனம் கலைத்தார். ‘உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்’ சொல்லிய இயேசு மீண்டும் தரையில் எழுதத் துவங்கினார்.

    ஒருவர் கல்லை எடுத்துக் கொண்டு முன்னே வந்தார். ‘ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம்...’ இயேசுவின் வார்த்தைகள் அவருடைய காதில் ஒலித்திருக்க வேண்டும் கல்லைப் போட்டு விட்டுப் பின் வாங்கினார்.

    இன்னொருவர் கல்லுடன் முன்னேறினார். இயேசு எழுதிக் கொண்டிருந்த எழுத்துக்களில் அவர் செய்த பாவங்களின் பட்டியல் தெரிந்திருக்கவேண்டும். அதிர்ந்து போய் பின் வாங்கி கல்லைப் போட்டு விட்டுப் போனார்.

    எல்லோரும் சில வினாடிகள் யோசித்தனர். பாவம் இல்லாதவனாய் அங்கே யாரும் இல்லை. அவர்கள் முதியவர் முதல் இளையவர் வரை ஒருவர் பின் ஒருவராகக் கற்களைப் போட்டு விட்டு சென்று விட்டார்கள். கடைசியில் இயேசுவும், அந்தப் பெண்ணும் மட்டுமே நின்றார்கள்.

    ‘பெண்ணே அவர்கள் எங்கே? உன் மீது யாரும் கல் எறியவில்லையா?’ இயேசு கேட்டார்.

    ‘இல்லை ஐயா...’ அவள் கண்ணீருடன் சொல்லிவிட்டு இயேசுவின் பாதங்களில் விழுந்தாள்.

    ‘நானும் உன்னைத் தீர்ப்பிட மாட்டேன். நீ போகலாம். இனிமேல் பாவம் செய்யாதே!’ இயேசு சொல்ல, அந்தப் பெண் கண்களில் கண்ணீரும் நன்றியும் வழிய அவ்விடம் விட்டு அகன்றாள்.

    மிகச் சிக்கலான ஒரு வழக்கை மிகவும் எளிதாகத் தீர்த்த இயேசுவின் ஞானத்தைக் கண்டு போதனை கேட்க வந்திருந்த மக்கள் சிலிர்த்தார்கள்.

    நமது பாவங்களின் பயனாக நாம் அழிவைச் சந்திக்க வேண்டும் என சாத்தான் விரும்புகிறான்.தொடர்ந்து நம்மீது அவன் குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் இறைவனோ நம் பக்கம் இருந்து, நம்மை மீட்டு அவருடைய பாதையில் கொண்டு வருவதற்காக விரும்புகிறார்.

    இயேசு பாவங்களை வெறுத்தார். அவர் பாவத்தின் நிழலைக் கூட மிதிக்கவில்லை. ஆனால் பாவிகளை நேசித்தார். விபசாரப் பாவத்தை விட அதிகமாய், ‘தன்னை உயர்ந்தவராகவும் பிறரை இழிவானவராகவும் பார்க்கும்’ பரிசேய மனநிலையை வெறுத்தார்.

    சட்டங்களுக்கு மேலானது அன்பு என்பதையும், பிறரை குற்றம் சாட்டாமல் நேசிக்கவேண்டும் என்பதையும், மன்னிப்பு பெற்றபின் பாவம் செய்யாத உறுதி வேண்டும் என்பதையும் இயேசு அந்த நிகழ்வின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
    Next Story
    ×