என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலய 122–வது ஆண்டு விழா சிறப்பு திருப்பலி
    X

    இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலய 122–வது ஆண்டு விழா சிறப்பு திருப்பலி

    மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்ற 122–வது ஆண்டு விழா சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சிற்ப நுணுக்கத்துடன் கட்டப்பட்டதாகும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மாதந்தோறும் முதல் மற்றும் கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்துகொள்வது தனிச்சிறப்பு. இதையொட்டி இந்த ஆண்டு 122–வது ஆண்டு விழா கடந்த மாதம் 24–ந்தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை ஆலயத்தில் திருப்பலி, நவநாள் நற்கருணை ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமை தாங்கி சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியை நடத்தினார். ஆலயத்தின் வெளிப்பகுதியில் மெழுகுவர்த்தி சிற்றாலயத்தை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து 33 அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.

    விழாவையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த சிறப்பு திருப்பலியில் கலந்துகொண்டனர். ஆலயத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் மற்றும் இடைக்காட்டூர் திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ் ஆகியோர் திருப்பலியில் கலந்துகொண்டவர்களுக்கு ஆசி வழங்கி சிறப்புரையாற்றினர்.

    விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்பணியாளர் ரெமிஜியஸ், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், மரியின் ஊழியர் அருட்சகோதரிகள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மானாமதுரை போக்குவரத்து போலீசார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×