search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை நடத்துதலை எதிர்கொள்வது எப்படி?
    X

    இறை நடத்துதலை எதிர்கொள்வது எப்படி?

    உலக நன்மைகளையும் ஆத்தும நன்மைகளையும் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கு இயல்பாக உள்ள ஆசை.
    உலக நன்மைகளையும் ஆத்தும நன்மைகளையும் பெற வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனுக்கு இயல்பாக உள்ள ஆசை. உலக நன்மைகளை, அதைப் பெற்றுள்ளவர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கண்ணால் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    ஆனால் ஆத்தும நன்மைகள் என்பவை இறைவனால் கொடுக்கப்பட்டு இருந்தாலும், அவற்றை வாழ்க்கையில் செயல்படுத்தும் போதுதான், அதைப் பெற்றிருப்பவர்களும், மற்றவர்களும் உணர முடியும்.

    தீமைக்கு தீமை செய்யாதிருத்தல், பகைப்பவனையும் நேசித்தல், துன்பங்களை சகித்தல், எதிலும் பொறுமையாக இருத்தல், இழப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், எப்பேர்பட்ட துரோகத்தையும் மன்னித்தல் போன்றவை எல்லாம் இறைவன் தரும் ஆத்தும நன்மைகளில் மிகச்சில.

    இந்த நன்மைகளை வாழ்க்கையில் செயல்படுத்தும் மன பலத்தையும் சேர்த்தே பக்தனுக்கு இறைவன் அளிக்கிறார். இந்த நன்மைகளை செயல்படுத்துகிறவர்களின் வாழ்க்கையை பார்த்துத்தான் இறைவனின் தன்மைகளை ஓரளவாகிலும் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

    ஆக, யார் யார் மூலமாக இறைத்தன்மைகள் வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை அப்படிப்பட்ட வழியில் இறைவன் நடத்துகிறார் என்பதும் உண்மை.

    உதாரணமாக, மனிதர்களின் துரோக குணத்தையும் மன்னிக்கும் தன்மை தனக்கு உண்டு என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த இறைவன் விரும்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்காக தான் தேர்ந்தெடுத்த பக்தனை, அவனது திராணிக்கேற்ற வகையிலான துரோகத்தை சந்திக்கவும், அதை அவன் மன்னிக்கவும் செய்து, தனது குணத்தை மனித குலத்துக்கு உணர்த்துகிறார்.

    ஆக, இறை பக்தன் என்பவன் வாய் வழியாகவோ, எழுத்து மூலமாகவோ மட்டும் அல்ல, வாழ்க்கை வழியாகவும் இறைவனை வெளிக்காட்டுபவனாக இருந்தாக வேண்டும். அதற்கேற்ற இறை நடத்துதலை பொறுமையோடும், சகிப்புத்தன்மையோடும், புலம்பலின்றியும் கடந்து செல்ல வேண்டும். ஏசுவின் பிறப்பின்போது நடந்த சம்பவங்களை வைத்து, இதுதொடர்பான சில சத்தியங்களை அறியலாம்.

    ஏசு எந்த காலகட்டத்தில், எங்கு, யாருடைய வயிற்றில் இருந்து மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதெல்லாம் இறைவன் ஏற்கனவே போட்டு வைத்த திட்டம். அதன்படி, ஏசுவை வயிற்றில் சுமந்து பெற்றெடுக்க மரியாள் தேர்வு செய்யப்பட்டாள். ஏசுவின் குழந்தைப் பருவ பாதுகாவலுக்கு யோசேப்பு மரியாள் தம்பதியினர் தேர்வு செய்யப்பட்டனர்.

    எல்லாமே தெய்வ ஏற்பாடு என்பதால் மனபாரங்கள், வேதனை, வலி, அலைச்சல், விரோதிகளின் துரத்தல், தப்பி ஓடுதல் போன்றவை இருக்காது என்று சொல்லிவிட முடியுமா?, இல்லையே.

    கணவன் வந்து இணைவதற்கு முன்பதாக பிள்ளையை சுமக்க வேண்டும் என்ற இறை கட்டளை, உடனே ஏற்க முடியாத ஒன்று. சமுதாயம் எப்படி பேசுமோ என்ற மனபாரம் ஒரு பக்கம்; மணக்க இருக்கும் வாலிபனிடம் இதை எப்படிச் சொல்ல முடியும் என்ற அழுத்தம் மற்றொரு பக்கம் நிச்சயம் மரியாளுக்கு உருவாகியிருக்கும்.

    மனைவியாக நிச்சயம் செய்யப்பட்ட மரியாள், இணைதலுக்கு முன்பே கருவுற்றவராக இருப்பதைக் கேட்டபோது யோசேப்புக்கு மிகுந்த துக்கம் உண்டாகியிருக்கும். ஆக, ஏசு பிறப்பதற்கு முன்னதாக அவர்கள் இரண்டு பேருமே கடினமான மனக்கஷ்டங்களால் நெருக்கப்பட்டனர்.

    அடுத்ததாக, வயிற்றில் பிள்ளையை சுமந்த நிலையில் பிள்ளைப் பேறுக்காக அலைந்த அலைச்சல் ஒரு பக்கம்; எந்த இடமும் கிடைக்கவில்லை என்பதால், இறுதியில் பிள்ளையை பெற்றெடுப்பதற்காக பாதுகாப்பற்ற, மறைவற்ற, தகுதியற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடி மற்றொரு பக்கம் நீடித்தது.

    அதோடு பிரச்சினைகள் விட்டுவிடவில்லை. ஏசு பிறந்தபோது உதித்த ராஜ நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள், அந்த நாட்டு (யூதேயா) ராஜா ஏரோதின் வீட்டுக்குப் போனார்கள்.

    அரசாளப் போகிறவரின் பிறப்பின் அறிகுறிதான் அந்த நட்சத்திரம் என்றும், ராஜாவின் வீட்டில்தானே அடுத்ததாக வரும் ராஜா பிறப்பான் என்றும் ஞானிகள் கூற, அந்த நாட்டு அரசியலிலும் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனென்றால், ஏரோது வீட்டில் அப்போது குழந்தை பிறந்திருக்கவில்லை.

    அடுத்ததாக வரும் ராஜா எனக்குப் பிறக்காமல், வேறு எங்கு பிறந்தான் என்று தேட முற்பட, மீண்டும் யோசேப்புக்கும் மரியாளுக்கும் பிரச்சினைகள் முளைத்தன. அடுத்த ராஜா, தனது குடும்பத்தில் இருந்து வரவில்லை என்றால், தன் மீது மக்களிடம் இருக்கும் மரியாதை போய்விடும் என்ற அச்சத்தில், குழந்தை ஏசுவைக் கொல்ல திட்டம் தீட்டினான். ஆனால் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை.

    இதை அறிந்த யோசேப்பு, குழந்தையையும் மரியாளையும் அழைத்துக் கொண்டு அடுத்த நாடான எகிப்துக்கு தப்பி ஓடினான். நடையாய் நடந்து செல்லும்போது, எவ்வளவு பயம் அவனை அலைக்கழித்திருக்கும். அறிமுகமானவர்கள் இல்லாத தேசத்தில் எப்படியெல்லாம் அவன் கஷ்டப்பட்டு சில காலம் வாழ்ந்திருப்பான்.

    ஏசு என்று நினைத்து எத்தனையோ வேறு ஆண் குழந்தைகளை ஏரோது கொலை செய்யும்போது, எவ்வளவாய் யோசேப்பு மரியாளின் மனது துக்கப்பட்டிருக்கும். ஏரோதுவை இறைவன் முதலிலேயே ஏதாவது செய்து முடக்கியிருந்தால் இவ்வளவு அலைச்சல், மனஉளைச்சல் இருந்திருக்காதே என்றுகூட அவர்கள் நினைத்திருக்க முடியும்.

    நமக்கு துன்பம் நேரிடும் போது பலரது எண்ணம் அப்படியாகத்தான் உள்ளது. துன்பத்துக்குக் காரணமானவர்கள் நீக்கப்படமாட்டார்களா, அதற்கு இறைவன் உதவி செய்யமாட்டாரா, என்ற கோணத்தில்தான் பலரும் ஜெபத்தை முன்வைக்கின்றனர். துன்பமே வந்துவிடக் கூடாது, அலைக்கழிப்பு இல்லாமலேயே வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதுதான் பலரது நோக்கமாக உள்ளது. ஆனால் பக்திக்கான வாழ்க்கை அப்படிப்பட்டதல்ல.

    ஏசுவைக் கொலை செய்ய முயற்சித்த ஏரோது, இறைவன் சித்தம் வைத்த நாட்கள் வரை அரசனாகத்தான் வாழ்ந்தான். பின்னர் அவனது மகன் அர்கெலாயு அந்தப் பட்டத்துக்கு வந்தான். தன்னால் கொலை செய்யப்பட்ட ஆண் குழந்தைகளில், ராஜ நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையும் அடங்கியிருக்கும் என்றும் அதனால்தான் தனது மகனால் பட்டத்துக்கு வர முடிந்தது என்றும் ஏரோது நினைத்திருப்பான். அந்த நாட்டு மக்களும் ஏரோதின் அரசியலை அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.

    பெரும்பாலானோர் இப்படி நினைத்திருக்க, இறைவனின் சித்தம் வேறு விதத்தில் நடந்து முடிந்தது. ஆனால் ஏசுவைக் காப்பாற்ற யோசேப்பு மரியாள் கடுமையான பாதைகளை பொறுமையோடு கடந்து செல்ல வேண்டியதிருந்தது. ஏசு கூறிய போதனைகளைக் காப்பாற்றுவதற்கு நாமும் பொறுமையோடு துன்பங்களைச் சகிக்கிறோமா? அல்லது வேறு எதையோ ஆசீர்வாதம் என்று நினைத்து ஓடிக் கொண்டிருக்கிறோமா? சிந்திக்க வேண்டிய தருணம் இது.
    Next Story
    ×