search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  ஸ்ரீபாலாம்பிகை சமேத சங்கரநாராயண சுவாமி கோவில்
  X

  ஸ்ரீபாலாம்பிகை சமேத சங்கரநாராயண சுவாமி கோவில்

  தஞ்சையில் வரலாறு போற்றும் பல கோவில்களில் மிகவும் பழமையான சிவாலயம் ஸ்ரீபாலாம்பிகை சமேத சங்கரநாராயண சுவாமி கோவில்.
  தென்னாடுடைய சிவன், எந்நாட்டவரும் போற்றி வணங்கும் இறைவன். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபெருமான், அங்கு இங்கு என்று இல்லாதபடி எல்லா இடங்களிலும் லிங்கத் திருமேனியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

  தஞ்சாவூர் என்றதும், அனைவரின் நினைவுக்கு வருவது, தஞ்சை பெரிய கோவில் தான். ஆனால் தஞ்சையில் வரலாறு போற்றும் பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் பழமையான சிவாலயம் ஸ்ரீபாலாம்பிகை சமேத சங்கரநாராயண சுவாமி கோவில். இது தஞ்சை மேலவீதியில் சிவகங்கை குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

  தலவரலாறு :

  கரிகாலனுக்குப் பிறகு பீம சோழ என்ற மன்னன் ஆட்சிக்கு வந்தான். இவன் கேரள தேசத்தைச் சேர்ந்த கமலபத்ராட்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டான். இவர்களுக்கு பல ஆண்டுகளாக புத்திர பாக்கியம் இல்லாததால் மிகவும் மனம் வருந்தினர். சிவபெருமானை வேண்டி தினமும் பிரார்த்தனை செய்தனர். மன்னனின் பிரார்த்தனை வீண்போகவில்லை.

  ஒரு நாள் பீம சோழ மனைவியான, கமலபத்ராட்சி கனவில் தோன்றிய ஈசன், ‘தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் மற்றும் கொங்கணேஸ்வரர் ஆலயங்களுக்கு இடையில், சங்கரநாராயணன் என்ற பெயரில், எனக்கும், விஷ்ணுவுக்கும் சேர்த்து ஒரு கோவில் கட்ட வேண்டும். நான் அங்கு லிங்க ரூபமாக எழுந்தருள்வேன். உன் கணவன் இந்தப் பணியை செய்தால் உங்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்’ என்று சொல்லி மறைந்தார்.

  கண் விழித்து எழுந்த கமலபத்ராட்சி, மனம் மகிழ்ந்தாள். தான் கண்ட கனவு பற்றி, தன் கணவனிடம் கூறினாள். மன்னனும் மகிழ்ச்சியடைந்தான். பின்னர் மனைவி மற்றும் மந்திரிகளுடன், இறைவன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தான். அங்கே பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கும், கொங்கணேஸ்வரர் ஆலயத்திற்கும் இடையே ஒரு இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் உடனடியாக அங்கே கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

  சங்கரநாராயண சுவாமி கோவில் :

  அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘இந்த சங்கரநாராயணர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள குளத்தில், வைகாசி மாதத்தில் நீராடி பக்தி சிரத்தையுடன் என்னை தரிசித்து வந்தால் நிச்சயமாக உனக்கு மக்கள் செல்வம் உண்டாகும்’ என்றது அந்தக் குரல். உணர்ச்சி வசப்பட்ட மன்னன், இறைவன் தன் மீது காட்டிய கருணையை எண்ணி மனமுருகினான். கோவில் கட்டும் பணி வெகு வேகமாக வளர்ந்து முடிந்தது. அசரீரி கூறியபடி, கோவில் அருகில் இருந்த குளத்தில் மன்னனும், அவனது மனைவியும் நீராடி இறைவனை வழிபட்டனர். சிறிது காலத்தில் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

  கோவிலின் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி– தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். இதையடுத்து சைவ – வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வண்ணம், சங்கர நாராயணர் சுவாமி சன்னிதி உள்ளது. சிவபெருமானும், பெருமாளும் ஒரே உருவமாக இருப்பது போன்ற வடிவம் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.

  வலப்பக்கம் ஜடை முடியுடன் தலையில் கங்கையும், சந்திரன், நெற்றிக்கண், திருநீறு, மகரகுண்டம் பாம்புடன் கூடிய ருத்திராட்ச மாலை, மழு, அபயஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் சிவபெருமான் தோற்றம் காணப்படுகிறது. இடப்பக்கத்தில் கிரீடம், திருநாமம், திருவாபரணங்களுடன்சங்கு, சக்கரத்துடன் பெருமாள் காட்சியளிக்கிறார்.

  சங்கரநாராயணர் சன்னிதியில் சிவன் அருகில் பார்வதியும், பெருமாளின் பக்கத்தில் லட்சுமியும் உள்ளனர். ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் ஒரே சன்னிதியிலும், காசி விஸ்வநாதர் விசாலாட்சி தாயார் ஒரே சன்னிதியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். விசாலாட்சி சன்னிதியில் ஒரு அம்மையார் அமர்ந்து, சிவலிங்கத்தை மலரால் அர்ச்சிப்பது போல் சிற்பம் உள்ளது. அது அவ்வையார் என்று கூறுகின்றனர்.

  கடன் சுமை நீங்கும் :

  ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக சன்னிதியின் அருகில் பைரவரும், எதிரே ஜூரஹரேசுவரரும், சிவகோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும் உள்ளனர். மேற்கு பிரகாரத்தில் சிறியதும், பெரியதுமாக இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. இதில் ஒன்று வரவாகவும், மற்றொன்று செலவாகவும் கருதப்படுவதாகவும், இந்த லிங்கங்களின் முன்பாக விளக்கு ஏற்றி வழிபட்டால், வியாபார நஷ்டம், கடன் சுமைகள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் உள்ள ஒரு லிங்கம் சிறிய சிதைவுடன் காணப்படுகிறது. இதனை கோணலிங்கம் என்று அழைக்கிறார்கள். இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
   
  கல்வெட்டு கூறும் செய்தி :


  இந்தக் கோவிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 1805–ம் ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னர், இந்த ஆலயத்தில் திருப்பணிகள் செய்திருப்பதை, இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இறைவன் சன்னிதி, தெற்கு வாசல் மற்றும் கிழக்கு, மேற்கு ஆகிய நிலைகளிலும் மராத்தி மொழியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. என்னென்ன வேலைகள் செய்யப்பட்டன, எந்த ஆண்டு, எந்த கால அளவில் நடைபெற்றது என்பது வரை இந்தக் கல்வெட்டில் செய்தியாக பொறித்து வைத்திருக்கிறார்கள்.

  பழம் பெருமை மிக்க இந்தத் திருக்கோவில் இறைவனை வழிபட்டு, சகல சவுபாக்கியங் களையும் பெறுவோமாக.

  Next Story
  ×