என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசுவின் மீட்பின் சின்னம் சிலுவை பாதை

    உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூரப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண தினம் மட்டுமே, 'புனித வெள்ளி' என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
    கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான். எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர்.

    இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் அவர்கள் பின்பற்றவில்லை.

    பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார். தனது 34-வது வயதில் பாவத்திலிருந்து மக்களை விடுவிக்க, தனது மாசில்லா பரிசுத்த ரத்தத்தை சிலுவையில் சிந்தினார்.

    இயேசு தனது முப்பதாம் வயதில் ஞானஸ்நானம் எடுத்த பின், மூன்றரை வருடங்களாக பல அற்புதங்களை மக்களுக்கு செய்தார். இதனை சகிக்காத யூத மத குருக்களும், ஆசாரியர்களும் இயேசுவை கொல்ல சதி செய்தனர். 'பஸ்கா' பண்டிகைக்கு சீடர்களுடன் ஜெருசலேம் சென்ற இயேசு, அதனை முடித்த பின், கெத்சமனே தோட்டத்துக்கு ஜெபம் செய்ய சென்றார். அப்போது இயேசுவை பிடிக்க, யூதமத குருக்கள், ஆசாரியர்களை அழைத்து சென்ற அவரது சீடரான யூதாஸ் காரியோத் 30 வெள்ளிக்காசுக்காக ஆசைப்பட்டு, அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான்.

    பிரதான ஆசாரியன் வீட்டில் இயேசுவை இரவு முழுவதும் அடித்து, துன்புறுத்தி மரணத்துக்கு ஏதுவான பொய் சாட்சியை தயாரித்தனர். மறுநாள் ரோம் அரசர் ஏரோதுவிடம் விசாரணைக்கு அழைத்து சென்று குற்றப்படுத்தினர். ஆனால், அரசரோ இவர் மீது குற்றம் காணாமல், கவர்னர் பிலாத்துவிடம் அனுப்பி வைத்தார். பிலாத்துவும் இவர்மீது எந்த குற்றமும் காணவில்லை.

    இவரின் ரத்தப்பலி என்மீது சுமராது, என கைகளை கழுவி, 'இவரை இஷ்டப்படி செய்யுங்கள்', என கூறி இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தார். பின் யூதமத குருக்கள் அதிகபட்ச தண்டனையாக சிலுவையில் அறைந்து கொல்ல முடிவு செய்தனர். இயேசுவை சாட்டையால் அடித்து, தலையில் முள்முடி சூட்டி, அதிக பாரமுள்ள சிலுவை மரத்தை தூக்க செய்து, 'கபாலஸ்தலம்' எனப்படும் கொல்கொதா என்ற இடத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்று சிலுவை மரத்தில் ஏற்றினர்.

    இதுவே... பெரிய வியாழன் தொடங்கி புனித வெள்ளி வரை இயேசு கிறிஸ்துவிற்கு நடைபெற்ற வேதனை கால அனுபவங்கள். கிறிஸ்துவ வழிபாட்டின் முக்கியமான நிகழ்வுகளும் இதுவே. இத்தகைய கொடூரமான சிலுவை பயணத்தின் வழியாகவே நம்மை பாவங்களில் இருந்து மீட்டுள்ளார்.

    இயேசுவின் உயிர் பிரிவதற்கு முன்பாக கேலி-கிண்டல், அவமானம், நரக வேதனையான சித்திரவதைகள் என சாவிற்கு அழைத்து செல்லும் எல்லா வழிகளிலும் அவரை இழுத்து சென்று இறுதியாக சிலுவையில் அறைந்து உயிரை குடித்தனர். அவர் சிந்திய குருதியில் உலக மக்களின் பாவமே அடங்கி இருந்தது. அப்படியான வேதனையிலும், நமக்காகவே மன்றாடினார்.

    இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகள்:

    1. கடவுளே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது, இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்.

    2. தனது வலது பக்கத்தில் இருந்த கள்ளனை பார்த்து, நீ இன்றைக்கும் என்னுடனே பரதீசிலிருப்பாய்.

    3. தன் தாயை நோக்கி, இதோ உன் மகன் என்றும், சீசன் யோவானை நோக்கி, இதோ உன் தாய் என்றார்.

    4. கடவுளே, கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்.

    5. தாகமாயிருக்கிறேன்.

    6. எல்லாம் முடிந்தது.

    7. கடவுளே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.

    என்று கூறி உயிரை இறைவனின் கையில் ஒப்படைத்தார். உலகில் மனிதாக பிறந்து, நற்செயல்கள் புரிந்து, சிலுவை மரணத்தைச் சந்தித்து, மனித குலத்துக்காக, இயேசுநாதர் பாவமன்னிப்பை பெற்ற நாளே 'புனித வெள்ளி' தினமாகும்.
    Next Story
    ×