search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாழ்வு தருபவர் இயேசு
    X
    வாழ்வு தருபவர் இயேசு

    வாழ்வு தருபவர் இயேசு

    இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது.
    விண்ணகத் தந்தையைப் போன்றே தாமும் வாழ்வின் ஊற்றாய் இருப்பதாக இயேசு கிறிஸ்து போதித்தார். தாமே விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்றும், தம்மிடம் இருந்தே வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.

    வாழ்வின் தண்ணீர்

    சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார்.

    அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்” என்றார். (யோவான் 4:9-14)

    வாழ்வு தரும் உணவு

    “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.

    அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” (யோவான் 6:35-40,53)

    வாழ்வின் ஊற்று

    “தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர்.

    அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:21-26) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)
    Next Story
    ×