என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது
    X

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது

    கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் மாதம் 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 2 நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. ராமேசுவரம் தீவிலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 கடல் மைல் தொலைவிலும் இந்த தீவு அமைந்துள்ளது. இங்குள்ள பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் ஓட்டு கொட்டகையால் ஆனது.

    இதன் அருகில் சமீபத்தில் இலங்கை அரசு புதிதாக ஒரு அந்தோணியார் ஆலயத்தை கட்டி முடித்து, அதை கடந்த மாதம் திறந்து வைத்தது. இந்தியா, இலங்கை நாட்டை சேர்ந்த பக்தர்கள் சேர்ந்து கொண்டாடும் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான விழா மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு நெடுந்தீவு பங்குதந்தை மூலம் ராமேசுவரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி முதல் நாள் (11-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு ஆலயத்தின் முன் பகுதியில் உள்ள கொடி கம்பத்தில் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து ஆலயத்தை சுற்றி பெரிய சிலுவையை இருநாட்டு பக்தர்களும் சுமந்து வர, சிலுவைப்பாதை, சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறுகின்றன.

    இரவு 8 மணிக்கு புனித அந்தோணியாரின் உருவச்சிலை வைக்கப்பட்ட திருத்தேரை இரு நாட்டு பக்தர்களும் சேர்ந்து ஆலயத்தை சுற்றி தூக்கி வலம் வரும் தேர்பவனி நிகழ்ச்சி நடக்கிறது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாய் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு முதல் ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்கள் சென்று வர படகுகள் மற்றும் அனைத்து செலவுகளும் மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக மீனவர்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் ராமேசுவரத்தில் இருந்து 3 ஆயிரத்து 252 பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×