என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா
    X

    சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா

    சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி அருகே சுண்டம்பட்டி பதுவை நகரில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு தேர் திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை நவநாள் திருப்பலி, மறையுரை, கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதை சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை இருதய செல்வம் நடத்தினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று முன்தினம் இரவு வெகு விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி காலை 8.30 மணிக்கு திருவிழா கூட்டு பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தர்மபுரி மறை மாவட்ட முதன்மை குரு சூசை தலைமை தாங்கினார். மாலையில் நடைபெற்ற கூட்டு பாடற்பலி நிகழ்ச்சிக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார்.

    இரவு 8 மணிக்கு அலங்கார தேர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் சுண்டம்பட்டி, கிருஷ்ணகிரி, எலத்தகிரி, ஒரப்பம், கந்திகுப்பம், பர்கூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சேவியர் செய்திருந்தார். விழாவை முன்னிட்டு நேற்று மாலை நன்றி திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) கொடி இறக்க நிகழ்ச்சியும், நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது.
    Next Story
    ×