என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நாளை 2 ஆட்டம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து பலப்பரீட்சை
- நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகளும் நேற்றுடன் 5 ஆட்டத்தில் விளையாடி விட்டன. இன்று முதல் 6-வது போட்டியில் ஆடுகின்றன.
நாளை (சனிக்கிழமை) 2 ஆட்டங்கள் நடக்கிறது. தர்மசாலாவில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் 134 ரன் வித்தியாசத்திலும் தோற்றது.
அதைத் தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று முத்திரைப் பதித்தது. இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 67 ரன்னிலும், நெதர்லாந்தை 309 ரன்னிலும் வீழ்த்தியது. 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
நியூசிலாந்து அணி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து (9 விக்கெட்), நெதர்லாந்து (99 ரன்), வங்காளதேசம் (8 விக்கெட்), ஆப்கானிஸ்தான் (149 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.
5-வது ஆட்டத்தில் இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 5-வது வெற்றி பெறும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வங்காளதேசம்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று உள்ளன. 2-வது வெற்றி பெறப்போவது வங்காளதேசமா? நெதர்லாந்தா? என எதிர்பார்க்கப்படுகிறது.






