search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாகிஸ்தானுடன் இன்று மோதல்- ஜடேஜா இடத்தில் களமிறங்கும் வீரர் யார்?
    X

    பாகிஸ்தானுடன் இன்று மோதல்- ஜடேஜா இடத்தில் களமிறங்கும் வீரர் யார்?

    • ஜடேஜா இடத்தில் இடம் பெறப்போவது ரிஷப் பண்டா, தீபக் ஹூடாவா, அக்‌ஷர் படேலா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
    • வேகப்பந்து வீரர் ஆவேஷ் கான் இடத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    6 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி 'லீக்' முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 'சூப்பர் 4' சுற்றுக்கு தகுதி பெற்றன. வங்காள தேசம், ஆங்காங் அணிகள் வெளியேற்றப்பட்டன.

    'சூப்பர் 4' சுற்று நேற்று தொடங்கியது. ஷார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. இதன் மூலம் 'லீக்' சுற்றில் தோற்றதற்கு இலங்கை பதிலடி கொடுத்தது.

    துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா-பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஏற்கனவே 'லீக்' ஆட்டத்தில் மோதி இருந்தன. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். அதே நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.

    20 ஓவர் சர்வதேச போட்டியில் இரு அணிகளும் இன்று மோதுவது 11-வது போட்டியாகும். இதுவரை நடந்த 10 ஆட்டத்தில் இந்தியா 8-ல் பாகிஸ்தான் 2-ல் வெற்றி பெற்றுள்ளன.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வாரம் நடந்த ஆட்டத்தில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தினேஷ் கார்த்திக்குக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு இடம் கிடைத்தும் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ளார்.

    ஜடேஜா இடத்தில் இடம் பெறப்போவது ரிஷப் பண்டா, தீபக் ஹூடாவா, அக்‌ஷர் படேலா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆல்ரவுண்டர் தேவைப்பட்டால் அக்‌ஷர் படேல் இடம் பெறுவார். அது மாதிரியான நிலை தேவையில்லை என்றால் மட்டுமே ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் இடத்தில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதும் உறுதியாகவில்லை. வேகப்பந்து வீரர் ஆவேஷ் கான் இடத்தில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்

    ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், புவனேஷ்வர் குமார், அவேஷ்கான் அல்லது அஸ்வின், அர்ஷ்தீப்சிங், யுசுவேந்திர சாஹல்.

    Next Story
    ×