search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி.என்.பி.எல். இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் மோதல்
    X

    பதானி - கவுசிக் காந்தி

    டி.என்.பி.எல். இன்று தொடக்கம்: முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் மோதல்

    • கடந்த முறை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மட்டும் போட்டி நடத்தப்பட்டது.
    • கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை நடந்துள்ள 5 தொடர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 முறையும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் (தற்போது சேலம் ஸ்பார்டன்ஸ்), மதுரை பாந்தர்ஸ் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020-ம் ஆண்டு போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.

    கடந்த முறை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மட்டும் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை சேப்பாக்கம் மைதானத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்படுவதால் இங்கு போட்டிகள் ஏதும் கிடையாது. சேலம், கோவை ஆகிய நகரங்கள் முதல்முறையாக டி.என்.பி.எல். போட்டிக்குரிய இடமாக சேர்க்கப்பட்டுள்ளது.

    போட்டியில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    முதல் நாளான இன்று (வியாழக்கிழமை) நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. கடந்த ஆண்டு இவ்விரு அணிகள் இடையிலான ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: அலெக்சாண்டர், பி.அருண், அருண்குமார், ஹரிஷ்குமார், ஜெகதீசன், ஜெகநாத் சீனிவாஸ், கவுசிக் காந்தி (கேப்டன்), நிலேஷ் சுப்பிரமணியன், பிரசித் ஆகாஷ், ராதாகிருஷ்ணன், ராகுல், சாய் கிஷோர், சாய் பிரகாஷ், சந்தீப் வாரியர், சசிதேவ், ஆர்.சதீஷ், சித்தார்த், சோனு யாதவ், சுஜய், விஜயகுமார், எஸ்.கார்த்திக், மதன்குமார்.

    நெல்லை ராயல் கிங்ஸ்: பாபா அபராஜித், அதிசயராஜ் டேவிட்சன், ஹரிஷ், பாபா இந்திரஜித் (கேப்டன்), ஜிதேந்திரகுமார், பிரதோஷ் ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ், ஷாஜகான், ஸ்ரீநிரஞ்சன், சூர்யபிரகாஷ், திரிலோக் நாக், வீரமணி, அஜிதேஷ், ஆர்ய யோஹன் மேனன், கிரிஷ் ஜெயின், ஈஸ்வரன், ரூபன்ராஜ், கார்த்திக் மணிகண்டன், ரோகன் ராஜூ, விக்ரம் ஜாங்கிட், ஆகாஷ் தேவ் குமார், சதீஷ்குமார்.

    Next Story
    ×