என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அலன்
இளம் வீரரின் அதிரடி சதம்- ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து
- இளம் வீரரான அலன் (23 வயது) டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
- நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும் கேப்டன் சாட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணி 2 டி20 போட்டி மற்றும் 1 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஸ்காட்லாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் - அலன் ஜோடி அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தது. கப்தில் 40 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த பிலிப்ஸ் 23 ரன்னில் வெளியேறினார்.
இளம் வீரரான அலன் (23 வயது) டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை (101) பதிவு செய்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் 6 சிக்சர் 8 பவுண்டரிகள் அடங்கும். நீசம் 30 ரன்னில் வெளியேற நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 225 ரன்கள் குவித்தது.
226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி நியூசிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்து 68 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும் கேப்டன் சாட்னர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 101 ரன்கள் குவித்த நியூசிலாந்தின் அலன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.






